உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரங்கநாதர் கோவிலில் நாளை பகல் பத்து உற்சவம் துவக்கம்

அரங்கநாதர் கோவிலில் நாளை பகல் பத்து உற்சவம் துவக்கம்

மேட்டுப்பாளையம்; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காரமடை அரங்கநாதர் கோவிலில், நாளை (31ம் தேதி) பகல் பத்து உற்சவம் துவங்குகிறது.கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகுண்ட ஏகாதசி விழா மிகவும், விமரிசையாக நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு முதல் பத்து நாட்கள், பகல் பத்து உற்சவம் நடைபெறும். பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். அன்று இரவு முதல் ராப்பத்து உற்சவம் 10 நாட்களும் நடைபெறும்.இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருமொழித் திருநாள் என்னும் பகல் பத்து உற்சவம், நாளை (31ம் தேதி) காலை, 8:45 மணிக்கு துவங்குகிறது. ஜனவரி ஒன்பதாம் தேதி இரவு நாச்சியார் திருக்கோலத்தில் அரங்கநாத பெருமாள் எழுந்தருளுகிறார். 10ம் தேதி காலை, 5:30 மணிக்கு வைகுண்ட ஏகாதசி என்னும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது.அன்று இரவு, 11:00 மணிக்கு திருவாய் மொழித் திருநாள் என்னும் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. 17ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபரி, குதிரை வாகனத்தில் அரங்கநாத பெருமாள் எழுந்தருளி வரும் உற்சவமும், 19ம் தேதி திருவாய் மொழித் திருநாள் சாற்று முறை நிறைவிழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன் மற்றும் செயல் அலுவலர் சந்திரமதி ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ