-நமது நிருபர்-காந்திபுரம் பாலத்தில் செய்ததைப் போலவே, அவிநாசி ரோட்டில் கட்டப்படும் பாலத்தின் குறுக்கே, ஐந்து இடங்களில் சுரங்க நடைபாதையை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ரத்து செய்வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், கோவை, அவிநாசி ரோட்டில், ரூ.1,621 கோடி மதிப்பில் 10.1 கி.மீ.,க்கு, உயர் மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது. பல ஆயிரம் மாணவர்களும், பொதுமக்களும் ரோட்டைக் கடக்கும் இடங்களை ஆய்வு செய்து, ஐந்து இடங்களில், பாதசாரிகளுக்கான கட்டமைப்பை உருவாக்கவும், திட்டமிடப்பட்டுள்ளது.லட்சுமி மில் சந்திப்பு, ஜி.ஆர்.ஜி., பள்ளி, கிருஷ்ணம்மாள் கல்லுாரி, பி.எஸ்.ஜி., கல்லுாரி மற்றும் கே.எம்.சி.எச்., மருத்துவமனை ஆகிய ஐந்து இடங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டன. கடும் எதிர்ப்பு
இந்நிலையில், கோவையில் முதற்கட்டமாக அவிநாசி ரோட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவதால், மெட்ரோ ஸ்டேஷன் அமையும் இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்கப்படுவது உறுதியாகியுள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஐந்து இடங்களில் சுரங்க நடைபாதை அமைப்பதை ரத்து செய்து, அதற்கான கருத்துருவை கலெக்டருக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோவை மெட்ரோ திட்டம், இப்போதைக்கு வருவதாகத் தெரியவில்லை.அப்படியே வந்தாலும் திட்டம் நிறைவேற குறைந்தபட்சம் ஏழெட்டு ஆண்டுகளாகி விடும். அதுவரையிலும் பாதசாரிகள் ரோட்டைக் கடப்பது பெரும் சிரமமாகும்; ஏராளமான விபத்துக்கள் நடக்கும்; உயிரிழப்புகள் ஏற்படும்.ஏற்கனவே, காந்திபுரம் பாலம் கட்டும்போது, சுரங்க நடைபாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டு, அதற்கும் சேர்த்தே நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பல காரணங்களைக் கூறி, அதை நெடுஞ்சாலைத்துறையினர் ரத்து செய்துவிட்டனர். இப்போது காந்திபுரம் சந்திப்புப் பகுதியில், தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ரோட்டைக் கடக்கின்றனர்.பாதசாரிகள் ரோட்டைக் கடக்க, 'பெலிகன் சிக்னல்' அமைக்கப்பட்டாலும், அதனால் ரோட்டில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே வாய்ப்பு அதிகம். அதனால் பாதசாரிகளுக்கான கட்டமைப்பை ரத்து செய்யக்கூடாது.நடை மேம்பாலமாக இருந்தால், மக்கள் பயன்படுத்துவதும், உயரமான வாகனங்கள் கீழே செல்வதும் சிரமம் என்பதால் சுரங்க நடைபாதை அமைப்பதே சிறந்தது.அவிநாசி ரோடு மேம்பாலத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.1,621 கோடியில், பாலம் கட்ட ரூ.1,069 கோடிக்கு டெண்டர் தரப்பட்டுள்ளது.மீதமுள்ள தொகையில், பாதசாரிகள் ரோட்டைக் கடப்பதற்கான கட்டமைப்புக்கும் சேர்த்தே, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, அந்தத் தொகையை வைத்து, இப்போதே சுரங்க நடைபாதை அமைக்கவும் திட்டமிட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.விபத்து உயிரிழப்புகளில் முதலிடம் வகிக்கும் கோவையில், பாதசாரிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு!பரிசீலித்த பின் முடிவு!''நடை மேம்பாலம் அமைக்கவே திட்டம் உள்ளது. நடை மேம்பாலத்தை மக்கள் பயன்படுத்துவது கடினம். ஆனால் மெட்ரோ ஸ்டேஷனுக்கும், இதற்கும் சம்பந்தமில்லை. பாதசாரிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. அதனால் நன்கு பரிசீலித்தபின்பே, இதில் இறுதி முடிவெடுக்கப்படும்.- - கிராந்திகுமார், கலெக்டர், கோவை.
ஒன்றுமேயில்லை!
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில், சுரங்க நடைபாதைகளே அதிகளவில் உள்ளன. அவற்றை மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் 257 சதுர கி.மீ., பரப்புள்ள கோவை நகரில், ரயில்வே ஸ்டேஷன், காந்திபுரம், அரசு மருத்துவமனை, சிட்ரா, சிங்காநல்லுார், உக்கடம், லட்சுமி மில்ஸ் உள்ளிட்ட ஏராளமான சந்திப்புகளில் தினமும் பல ஆயிரம் மக்கள், ரோட்டைக் கடக்க பெரும் அவதிப்படுகின்றனர்.பல ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் தீட்டும் நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் இதைப் பற்றி துளியும் அக்கறை கொள்வதில்லை. தங்களுக்கு வர வேண்டிய கமிஷன் வந்தால் போதும்; மக்கள் எக்கேடு கெட்டால் என்ன என்ற மனநிலையில் தான் பணியாற்றுகின்றனர்.
நிறுத்திவைப்பு
நெடுஞ்சாலைத்துறையின் (திட்டங்கள்) பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அவிநாசி ரோட்டில் பாதசாரிகளுக்கு சுரங்க நடைபாதை அமைப்பதா அல்லது நடை மேம்பாலமா கட்டுவதா என்பதே இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மெட்ரோ ஸ்டேஷன் குறித்த வரைபடம் வந்தபின்பே, அதை முடிவு செய்ய முடியும். அது தெரியாததால் நிறுத்தி வைத்துள்ளோம்.' என்றார்.