நெரிசலான சாலைகளில் நடை மேம்பாலம்; பாதசாரிகள் எதிர்பார்ப்பு
பொள்ளாச்சி; நகரில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில், நடைமேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகரில், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதுஒருபுறமிருக்க சாலையோர ஆக்கிரமிப்பு, விதிமீறிய பார்க்கிங் உள்ளிட்ட பல சவால்கள் எதிர்கொண்டு, மக்கள் பலரும் சாலையை கடந்து வருகின்றனர்.குறிப்பாக, பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்ட், அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் பாதசாரிகள், மாணவர்கள் அதிகளவில் சாலையை கடந்து வருகின்றனர்.போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில், இதுபோன்று சாலையை கடக்க முற்படும்போது, விபத்து அபாயம் ஏற்படுகிறது. அதன்படி, மாணவர்கள் பாதுகாப்பு இல்லாமல் சாலையை கடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.எனவே, பாதசாரிகள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நகரின் நெரிசலான பகுதிகளில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்.தன்னார்வலர்கள் கூறியதாவது:புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட் செல்ல சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அவை முறையாக, பராமரிக்க முடியாத காரணத்தால், மக்கள், சாலை மார்க்கமாகவே கடந்து செல்கின்றனர். ஒருபுறம் நெரிசல் ஏற்பட்டாலும், விபத்து அபாயமும் ஏற்படுகிறது. மாணவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கின்றனர்.எனவே, நகரில், நெரிசல் மிக்க பகுதிகளில் நடை மேம்பாலம் அமைக்க, துறை ரீதியான அதிகாரிகள் ஒன்றிணைந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இது தொடர்பாக, பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.