| ADDED : நவ 23, 2025 05:32 AM
கோவை: கோவையில் வாகன ஓட்டிகள் அதிகமாக பயன்படுத்தும் பிரதான ரோடுகளில் திருச்சி ரோடும் ஒன்று. பள்ளி, கல்லுாரிகள், அரசு மருத்துவமனை, மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அமைந்திருப்பதால், வாகன போக்குவரத்து எந்நேரமும் காணப்படும். சுங்கம் ரவுண்டானா பகுதியில் அரசு விருந்தினர் மாளிகை செல்லும் வழித்தடத்தில் பள்ளி, கல்லுாரிகள் உள்ளதால், காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவியர் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பஸ்களில் செல்லக்கூடிய மாணவியர் ரோட்டை கடந்து, ஸ்டாப் அமைந்துள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டும். சுங்கம் ரவுண்டானா அருகே, 'பெலிகன்' சிக்னல் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல், அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பும் சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது. பாலத்தின் மையத்தடுப்புக்கு இடையே, சிறிய இடைவெளி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியே மாணவியர் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். ஆனால், பெலிக்கன் சிக்னல் இயங்குவதில்லை. அதனால், வாகன போக்குவரத்துக்கு இடையே உயிர் பயத்துடன் கடக்கின்றனர். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு, பெலிக்கன் சிக்னலை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பாதசாரிகள் பாதுகாப்பாக ரோட்டை கடப்பதற்கான வசதியை, உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.