தமிழகத்திற்கு வருது புதுப்புது நெல்ரகங்கள்: விற்பனைக்கு வராதது குறித்து மக்கள் கேள்வி
திருப்புவனம்: தமிழகம் முழுதும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக புதுப்புது நெல் ரகங்கள் அறி முகமாகி விளைச்சலாகி கொண்டிருக்கும் நிலையில் அந்த ரகங்கள் விற்பனைக்கு வராதது ஏன் என பொதுமக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. தமிழகம் முழுதும் கோடை மழை, வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட காலங்களை பயன்படுத்தி நெல் விவசாயம் பெருமளவு மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் ஐ.ஆர்.20., பொன்னி உள்ளிட்ட ரகங்களே அதிகளவில் பயிரிடப்பட்டு வந்தன. காலம் காலமாக பயிரிடப்பட்டு வந்த நெல் ரகங்களை மாற்றி புதிய ரக நெல் விதைகள் மானிய விலையில் விவசாயி களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ஆர்.என்.ஆர்., என்.எல்.ஆர்., கோ 40, 41, 50, 51, 52, ஏ.எஸ்.டி., 19, 21, ஜே.ஜி.எல்., அண்ணா ஆர் 4 என பல்வேறு ரகங்களை அரசு அறிமுகம் செய்து, ஏக்கருக்கு 40 முதல் 65 மூடைகள் வரை நெல் விளைச்சல் காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் அரசு நெல் கொள்முதல் மையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு நவீன அரிசி ஆலைகளில் அரவைக்கு கொண்டு சென்று ரேஷன் கடைகள் மூலம் விற்பனையும் செய்யப்படுகிறது. இதுதவிர தனியார் அரவை ஆலைகள் மூலம் நெல் அரிசியாக மாற்றப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் காரைக்குடி புதுவயலில் அதிகளவு நவீன அரிசி ஆலைகள் உள்ளன. இங்கிருந்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அரிசி விற்பனைக்கு அனுப்பப் படுகின்றன. ஆனால் நடைமுறையில் புது ரகங்களில் நெல் அறிமுகமானாலும் அரிசி கடைகளில் பழைய ரக அரிசிகளே விற்பனை செய்யப்படுகின்றன. புது ரக அரிசிகள் விற்பனை செய்யப்படுவதில்லை. அரிசி கடைகளில் பொன்னி, கர்நாடகா, கல்சர் ரகங்களே அரிசி விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தமிழகத்தில் அதிகளவு என்.எல்.ஆர்., ரக நெல் விளைவிக்கப்படுகிறது. இது 90 சதவிகிதம் பொன்னி அரிசி போன்றே பொடியாக இருக்கும், சாதமும் வெள்ளையாக இருக்கும். எனவே வியாபாரிகள் என்.எல்.ஆர்., ரக அரிசியை பாலிஷ் செய்து கல்சர் பொன்னி, கர்நாடக பொன்னி என விற்பனை செய்கின்றனர். அரிசியில் கலப்படம் என்பதை பொதுமக்களால் எளிதாக கண்டறிய முடியாது. வித்தியாசமும் தெரியாது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு கிலோ ரூ.25 என விற்பனை செய்ய வேண்டிய அரிசியை, 45 முதல், 60 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகளும் மவுனம் சாதிப்பதால் கலப்பட அரிசி விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.