புழுக்களுடன் வரும் குடிநீரில் துர்நாற்றம் வீசுது! குடிக்க முடியாமல் அவதிப்படுவதாக மக்கள் மனு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நந்தனார் காலனியில் வினியோகிக்கும் குடிநீரில் புழுக்கள் கலந்து வருவதுடன், மண் வாசனை, துர்நாற்றத்துடன் இருப்பதால், குடிக்க முடியாமல் அவதிப்படுகிறோம்,' என, அப்பகுதி மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் முகாம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் (பொ) விஸ்வநாதன் தலைமை வகித்தார்.பொள்ளாச்சி தொழிற்பேட்டை பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:தொழிற்பேட்டையில் இருந்து கஞ்சம்பட்டி பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். இங்குள்ள பஸ் ஸ்டாபில் கடந்த சில நாட்களாக, காலை, 8:50 - 9:00 மணிக்கு கஞ்சம்பட்டி செல்லும் பஸ், 14சி/37, 14 பஸ்கள் நிறுத்தம் செய்வதில்லை.மாணவர்கள் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. விடுமுறை எடுத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கும். எனவே, பஸ் நிறுத்திச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.* நந்தனார் காலனி மக்கள் கொடுத்த மனுவில், 'பொள்ளாச்சி நந்தனார் காலனி பகுதியில் வினியோகம் செய்யப்படும் குடிநீரில் புழுக்கள் கலந்து வருவதுடன், மண் வாசனை, துர்நாற்றத்துடன் வருவதால் குடிக்க முடியாமல் அவதிப்படுகிறோம்.சாக்கடை கால்வாய் துார்வாரப்படாமல் உள்ளதுடன், தெருவிளக்கும் சரியாக எரிவதில்லை. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, குறிப்பிட்டுள்ளனர்.* சின்ன நெகமம், உதவிபாளையம் பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பெரிய நெகமத்தை சேர்ந்த தனியார் தொழிற்சாலை உரிமையாளர்கள், வீதம்பட்டி விவசாய பூமிக்கு தனியார் நிறுவனம் வாயிலாக, தண்ணீர் கொண்டு செல்ல சந்திராபுரம் வழித்தடத்துக்கு பதிலாக, சின்ன நெகமம், உதவிபாளையம் வழித்தடத்தில் அனுமதி கேட்டுள்ளனர்.தென்னை நார் தொழிற்சாலை உரிமயைாளர்கள், பி.ஏ.பி., பிரதான கால்வாய் அருகே ஏழு சென்ட் நிலத்தில், 60 மீட்டர் துாரத்தில், 100 அடி கிணறு வெட்டி பக்கவாட்டு துளை போார்களை அமைத்துள்ளனர். இந்த கிணறுகளை பைப்லைன் வாயிலாக இணைத்து பி.ஏ.பி., தண்ணீரை திருடும் உள்நோக்கம் இதன் பின்னணியில் உள்ளது.ஏற்கனவே, பி.ஏ.பி., தண்ணீரை முறைகேடாக பயன்படுத்தியதால், சப் - கலெக்டர் உத்தரவின் பேரில், திறந்தவெளி கிணற்றின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தற்போது, மீண்டும் ஏழு சென்ட் பூமியில் கிணற்றுக்கு மின் இணைப்பு பெற்றுள்ளார். எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, சின்ன நெகமம், உதவிபாளையம் வழியாக தண்ணீர் கொண்டு செல்ல பைப்லைன் அனுமதி வழங்க கூடாது.* அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் கொடுத்த மனுவில், 'வால்பாறை ரோட்டில், வஞ்சியாபுரம் பிரிவு முதல் நாட்டுக்கால்பாளையம் வரை ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இவ்வழியாக பஸ்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்லவும் மற்றும் பொதுமக்கள் நடப்பதற்கும் சிரமமாக உள்ளது. இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.