காந்திசிலை பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்த மக்கள் கோரிக்கை
வால்பாறை: வால்பாறை நகரில், காந்திசிலை வளாகம் தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படுகிறது. பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் ஆக்கிரமிப்பு கடைகளாலும், வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் பஸ் உள்ளே சென்று வர முடியாமலும், பயணியர் நிற்க கூட இடமில்லாமலும் பிரச்னை ஏற்படுகிறது. பயணியர் நிழற்கூரையை விரிவுபடுத்த நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருவதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் கூறியதாவது: காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் பிரதான பஸ் ஸ்டாண்டாக இருப்பதால், நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணியர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வந்து செல்கின்றனர். இது தவிர, சுற்றுலா பயணியரும் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளனர். இங்கு, பயணியர் வசதிக்காக ஒரே ஒரு நிழற்கூரை மட்டுமே உள்ளது. இடநெருக்கடியால் நிற்க இடமில்லாமல், பயணியர் தவிப்பதை தவிர்க்க, காந்திசிலை பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடத்தில் கூடுதலாக பயணியர் நிழற்கூரை அமைத்தால் மட்டுமே, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணமுடியும். இவ்வாறு, கூறினர்.