தொடர் விடுமுறையால் ஊருக்கு செல்ல புது பஸ் ஸ்டாண்டில் திரண்ட மக்கள்
பொள்ளாச்சி; தொடர் விடுமுறை காரணமாக, சொந்த ஊரான வால்பாறைக்கு செல்ல பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் ஒரே நேரத்தில் மக்கள் திரண்டனர்.வால்பாறையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பலரும், உயர்கல்வி மற்றும் பணி நிமித்தமாக, பிற மாவட்டங்களில் தங்கி உள்ளனர்.பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில், சொந்த ஊரான வால்பாறைக்கு சென்று திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வகையில், பொள்ளாச்சி - - வால்பாறை இடையே குறிப்பிட்ட நேர இடைவெளியில், அரசு பஸ்கள் இயக்கப்பட்டும் வருகின்றன.பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக, நேற்று பிற பகுதிகளில் உள்ள மக்கள், சொந்த ஊரான வால்பாறைக்கு செல்ல, பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்தனர்.பஸ் ஸ்டாண்டினுள் பஸ் வரும்போதே, முண்டியடித்து ஏறி, ஜன்னல் வழியே 'சீட்' பிடித்தும் அமர்ந்தனர். வழக்கம்போல, கூட்ட நெரிசலை பொறுத்து, பொள்ளாச்சி வால்பாறை இடையிலான அரசு பஸ்கள், கூடுதல் 'டிரிப்' இயக்கப்பட்டது.இருப்பினும், ஒரே நேரத்தில், அதிகப்படியான மக்கள், பஸ் ஸ்டாண்டில் திரண்டனர். இதனால், பயணியர் பாதுகாப்பாக பஸ்சில் ஏறிச்செல்வதை உறுதிப்படுத்தும் வகையில், போக்குவரத்து கழக அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.