மூடப்படாத குழியால் மக்கள் தவிப்பு
அன்னுார்,: அன்னுாரில் மூன்று மாதமாக மூடப்படாத குழியால் மக்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அன்னுார் பேரூராட்சியில் 5,800 க்கும் மேற்பட்ட வீட்டு குடிநீர் இணைப்புகள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட பொது குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கோவை சாலையில் மேல்நிலைத் தொட்டி அமைந்துள்ள இடத்தின் முன்புறம் குழாயில் கசிவு ஏற்பட்டது.இதையடுத்து மூன்று மாதங்களுக்கு முன்பு, பத்து அடி நீளம், ஆறடி அகலத்துக்கு, இரண்டு அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு, குழாய் கசிவு பராமரிப்பு பணி நடந்தது. எனினும் அதன் பிறகு மூன்று மாதங்கள் ஆகியும் குழி மூடப்படவில்லை.இதனால் இதை ஒட்டி உள்ள கழிவுநீர் வடிகாலில் இருந்து கழிவு நீர் குடிநீர் குழாய் இருக்கும் பகுதியில் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் விரைவில் குழியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.