| ADDED : பிப் 27, 2024 11:11 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் கட்டட கழிவு அகற்றப்பட்டதால், பொதுமக்கள் சிரமப்பட்டனர்.பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டுக்கு, கோவை, பழநி, திருப்பூர் மற்றும் புளியம்பட்டி, நெகமம் உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு செல்லும் பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர். இங்குள்ள பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை மீது மழைநீர் தேங்கி நிற்பதால் சுவர் முழுவதும் ஈரம் காத்தது.கடந்தாண்டு ஜூலை மாதம் புளியம்பட்டி பகுதிக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பகுதியில், மழை நீரால் ஈரம் காத்த கான்கிரீட் சுவர் பெயர்ந்து, அங்கு பஸ்சுக்காக நின்ற மாணவி மீது விழுந்தது. இதனால், அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.ஆனால், மக்கள் தடுப்புகளை தாண்டிச் சென்றதால் வீண் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் இருந்தது. இதையடுத்து, பராமரிப்பில்லாத கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.இந்நிலையில், பழைய கட்டடம் இடிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று முழுமையாக இடிக்கப்பட்டது. கழிவுகளை அகற்றும் போது பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றாததால் துாசி பறந்ததால் மக்கள் சிரமப்பட்டனர்.பொதுமக்கள் கூறியதாவது:பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், திருப்பூர் பஸ் நிறுத்தப்பகுதி அருகே உள்ள கட்டடம் இடிக்கும் போது, அதை சுற்றி பாதுகாப்பு தடுப்புகள் அமைத்து இடிக்க வேண்டும். அந்த விதிமுறை பின்பற்றவில்லை. தற்போது, இடிக்கப்பட்ட கட்டடத்தின் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.கழிவுகள் அகற்றும் போது அதிகளவு துாசி பறந்ததால், பஸ்சுக்காக காத்திருந்தோர் அவதிப்பட்டனர். துாசி பிரச்னையால், சுவாச கோளாறு உள்ளோர் சிரமப்பட்டனர். கடைகளில் துாசி படிந்தது. இதுபோன்ற பணிகளை செய்யும் போது, பாதுகாப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.