| ADDED : ஜன 20, 2024 08:17 PM
கோவை:பாலிசி கிளைம் தொகை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்ததால், மக்கள் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.கோவையை சேர்ந்த கலைவாணி, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், ஐந்து லட்சம் ரூபாய்க்கு பாலிசி எடுத்திருந்தார். அவருக்கு, கர்ப்பபையில் கோளாறு ஏற்பட்டதால், டாடாபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கான மருத்துவ சிகிச்சை தொகை, 69 ஆயிரத்து 989 ரூபாய் கிளைம் செய்வதற்காக, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். முதலில், கிளைம் செய்வதற்கு ஒப்புதல் அளித்த இன்சூரன்ஸ் நிறுவனம், பின் மறுத்தது. காரணம் கேட்ட போது, பாலிசி எடுத்த இரண்டு ஆண்டுக்குள் அறுவை சிகிச்சைக்கு கிளைம் செய்ய முடியாது என்று தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட அவர், கோவையிலுள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதுதொடர்பாக இரு தரப்பினரிடம் நீதிபதி நாராயணன் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.விசாரணை முடிவில், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:பாலிசிக்கு நிபந்தனை இருந்தாலும், மனுதாரர் கோரிக்கைக்கு முதலில் ஒப்புதல் அளித்து விட்டு, அதன் பின், விண்ணப்பத்தை நிராகரித்ததை ஏற்க முடியாது. எனவே மனுதாரருக்கு, மொத்த கிளைம் தொகையில், 50 சதவீதத்தை, அதாவது 34 ஆயிரத்து 994 ரூபாயை, மூன்று வாரத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால் வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் தெரிவித்துள்ளார்.