உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேகத்தடை அமைக்க மக்கள் மனு

வேகத்தடை அமைக்க மக்கள் மனு

குடிமங்கலம்:தொடர் விபத்து ஏற்பட்டும், வேகத்தடை அமைக்காத நெடுஞ்சாலைத்துறையைக்கண்டித்து தொடர் போராட்டத்தில், ஈடுபட உள்ளோம் என, கொங்கல்நகரம் சுற்றுப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, அந்தியூர் - ராமச்சந்திராபுரம் ரோடு சந்திக்கும், நான்கு ரோடு சந்திப்பு கொங்கல்நகரத்தில் உள்ளது. சமீபத்தில், அப்பகுதியில், மாநில நெடுஞ்சாலை, விரிவாக்கம் செய்யப்பட்டது.இதையடுத்து, நால்ரோடு சந்திப்பு அப்பகுதியில், இருப்பது தெரியாமல், வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. அப்போது, ராமச்சந்திராபுரம் மற்றும் அந்தியூர் நோக்கி செல்லும் வாகனங்கள் மாநில நெடுஞ்சாலையை கடக்க முடிவதில்லை.சந்திப்பு அருகிலேயே பஸ்களும் நிறுத்தப்படுவதால், அப்பகுதி விபத்து பகுதியாக மாறி விட்டது. நேற்று முன்தினம் இரவு, தாராபுரம் செல்லும் பஸ் நால்ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த போது, மாநில நெடுஞ்சாலையில் வந்த லாரி, பஸ்சின் பின்பகுதியில், மோதி விபத்து ஏற்பட்டது.இதனால், ஆவேசமடைந்த மக்கள், மாநில நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில், ஈடுபட்டனர்.சம்பவ இடத்துக்கு சென்ற குடிமங்கலம் போலீசார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்கள் கோரிக்கை குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தனர். இதையடுத்து அப்பகுதியில், போக்குவரத்து சீரானது.கிராம மக்கள் கூறுகையில், 'கொங்கல்நகரம் நால்ரோடு சந்திப்பில், காலை, மாலை நேரங்களில், அதிக நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடை அமைக்காவிட்டால், தொடர் போராட்டத்தில், ஈடுபடுவோம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளோம்,' என்றனர்.நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், ' கொங்கல்நகரம் அரசுப்பள்ளி அருகே, வேகத்தடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை மனு அனுப்பினர். ஊராட்சி நிர்வாகத்தினரும் வலியுறுத்தியதால், அவ்விடத்தில், விரைவில் வேகத்தடை அமைக்கப்பட உள்ளது. நால்ரோடு சந்திப்பு பிரச்னை குறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ