காலிப்பணியிடங்களை நிரப்ப மாவட்ட கலெக்டருக்கு மனு
வால்பாறை,; அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், என, தே.மு.தி.க., கோரிக்கை விடுத்துள்ளது.வால்பாறை தே.மு.தி.க., நகர பொறுப்பாளர் ரவீந்தரன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறை நகரில், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதிய டாக்டர் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக, மகப்பேறு மருத்துவர், அறுவைசிகிச்சை மருத்துவர், எலும்பு பிரிவு மருத்துவர், செவிலியர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாகவே உள்ளன.மருத்துவமனையில் ரத்தபரிசோதனை மையம் முதல் தளத்தில் செயல்படுவதால் வயதானவர்கள் படி ஏறி செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, கீழ் தளத்தில் ரத்த பரிசோதனை மையம் அமைக்க வேண்டும். காலியாக உள்ள டாக்டர், செவிலியர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிறப்பாக சிகிச்சை அளிக்கும் வகையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய கட்டடத்தை நோயாளிகள் நலச்சங்க கூட்ட அரங்காக மாற்றி, மாதம் தோறும் நோயாளிகள் குறைகளை கேட்க கூட்டம் நடத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.