உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலைப்பாதையை ஆக்கிரமிக்கும் செடிகள்; விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்

மலைப்பாதையை ஆக்கிரமிக்கும் செடிகள்; விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்

வால்பாறை; வால்பாறை மலைப்பாதையில், ரோட்டோரத்தில் வளர்ந்துள்ள புதர் செடிகளால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வால்பாறையிலிருந்து, ரொட்டிக்கடை, அய்யர்பாடி, அட்டகட்டி, ஆழியாறு வழித்தடத்தில், 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த ரோட்டில் நாள் தோறும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக கனரக வாகனங்கள் இந்த ரோட்டில் அதிக அளவில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், ஆழியாறிலிருந்து வால்பாறை வரையிலும் ரோட்டின் இருபுறமும், செடிகள் உயரமாக வளர்ந்துள்ளன. ரோடு பகுதியை ஆக்கிரமிக்கும் செடிகளால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: தற்போது மழை தீவிரமாக பெய்யும் நிலையில், பனி மூட்டமும் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் ரோட்டை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மலைப்பாதையில் உள்ள செடிகள் வெட்டப்படாமல் உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதே போல், வால்பாறையிலிருந்து சோலையாறுடேம், சின்கோனா, குரங்குமுடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரோட்டில், செடிகள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன. விபத்து ஏற்படுவதற்கு முன்பாக செடிகளை அகற்ற வேண்டும். இவ்வாறு, கூறினர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது,'ஆழியாறு முதல் வால்பாறை வரும் வழியில், சாலையோரம் உள்ள செடிகள் வெட்டும் பணி நடக்கிறது. மழையினால் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மழைக்கு பின் செடிகள் வெட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை