காந்தி ஜெயந்தி விழாவில் அகிம்சை உறுதிமொழி
கோவை; அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் 156வது காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், '' காந்தி பெற்ற சுதந்திரம் வெறும் நாடு, அரசியலுக்கான சுதந்திரமில்லை. பல வகையான சமத்துவமின்மை, ஏற்றத்தாழ்வுகளிலிருந்து சுதந்திரம் பெறுவதும் இதில் அடங்கும். வேற்றுமையில் ஒற்றுமை, சுயசார்புடையதாக திகழ்வது, கூட்டு நல்லிணக்கம் ஆகியவைதான் காந்தியின் வழியில் நாம் பின்பற்ற வேண்டியவை, '' என்றார். காந்திகிராம கிராமப்புற பல்கலையின் முன்னாள் பேராசிரியர் மற்றும் கல்வியாளர் பழனிதுரை காந்தியின் வாழ்க்கை குறித்த பல்வேறு அரிய தகவல்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார். இசைத்துறை மாணவர்கள் பஜனை பாடல்கள் பாடினர். அமைதி, உண்மை, அகிம்சை ஆகியவற்றின் மதிப்புகளை அன்றாட வாழ்வில் நிலைநிறுத்த அனைத்து பங்கேற்பாளர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பேராசிரியர்கள், மாணவர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.