| ADDED : ஜன 01, 2026 05:15 AM
கோவை: மருதமலையில், வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடந்த உழவாரப் பணியில், 2 டன் பிளாஸ்டிக் குப்பை அகற்றப்பட்டது. மலையடிவாரத்தில் இருந்து கோவில் வரை செல்லும் வழியின், இரு புறங்களிலும் பிளாஸ்டிக் குப்பை அகற்றும் உழவாரப் பணியில், இந்த அமைப்பினர் ஈடுபட்டனர். வனத்துறை வழிகாட்டலுடன் 6வது முறையாக குப்பை அகற்றப்பட்டது. ஐந்தாவது மண்டப பகுதியில் நடந்த இந்த உழவாரப் பணியில், பக்தர்கள் பயன்படுத்தி தூக்கி எறிந்த பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டன. 'பிளாஸ்டிக் கழிவுகளால் வனத்தின் மண்வளமும், வன உயிரினங்களும் பாதிப்படையாமல் பாதுகாக்கும் நோக்கில், இந்த உழவாரப் பணியை மேற்கொள்கிறோம். 400 பேர் குழுவில் உள்ளோம். ஏற்கனவே வெள்ளியங்கிரி பகுதியில் 18 வாரங்களில் 10 டன் பிளாஸ்டிக் குப்பையை அகற்றியுள்ளோம்' என, வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்தனர். பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதோடு, பக்தர்கள் குப்பைத் தொட்டியைப் பயன்படுத்த வேண்டும் எனவும், விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.