உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

கல்லுாரி நிர்வாகம் மீது புகார்

கொண்டம்பட்டி மகாராஜா மருத்துவ துணை அறிவியல் கல்வி நிறுவனத்தில், படித்து வரும் மாணவி, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். புகாரில், கல்லுாரி விடுதியில் தங்கி, மெடிக்கல் லேபாராட்டரி டெக்னாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது வகுப்பில் ஆண்கள் மூன்று பேர், பெண்கள் ஐந்து பேர் படிக்கின்றனர்.இந்நிலையில், அரசின் அனுமதி பெறாமல் கல்லுாரி செயல்படுவதாக தெரிகிறது. கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் மாற்று சான்றிதழ் கேட்ட போது, தர முடியாது என கல்லுாரி நிர்வாகிகள் மிரட்டினர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரை பெற்ற போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விபத்தில் ஒருவர் பலி

கேரளா மாநிலம், கொல்லங்கோட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சஜித்,25, சுபீஸ்,22 ஆகியோர் பழநி செல்வதற்காக நேற்றுமுன்தினம் இருசக்கர வாகனத்தில், பொள்ளாச்சி வழியாக சென்றனர். அப்போது, தனியார் கல்லுாரி அருகே மைய தடுப்பில் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர்.அதில், சஜித்,25 பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். சுபீஸ் சிகிச்சை பெறுகிறார். இது குறித்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி

கோவை, போத்தனுாரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் ஜாபர்,45. இவர், தனது நண்பர்களுடன் அம்பராம்பாளையம் ஆற்றுப்பகுதிக்கு வந்து குளித்தார். எதிர்பாரதவிதமாக நீர்சுழலில் சிக்கி அப்துல்ஜாபர் நீரில் மூழ்கினார். உடனிருந்த நண்பர்களும், அங்கிருந்தவர்களும் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். அதற்குள் அவர் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து. தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ