பொள்ளாச்சி கோர்ட்களில் போலீசார் பாதுகாப்பு
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் உள்ள கோர்ட்களில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், கடந்த நவ., மாதம் வக்கீல் வெட்டப்பட்டார். அப்போது, தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டம் நடத்தி, பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.அதே போன்று, திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை செய்து, பாதுகாப்பு விஷயத்தில் போலீஸ் என்ன செய்கிறது என, ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.அதன்பின், இந்த கொலை சம்பவம் தொடர்பாகவும், மாவட்ட நீதிமன்றங்களில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதையடுத்து, பொள்ளாச்சியில் உள்ள ஜே.எம்., எண் 1, ஜே.எம்., எண் 2, சப் - கோர்ட் பகுதியில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு எஸ்.ஐ., இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.