லஞ்சம் பெற்ற வழக்கில் போலீஸ்காரருக்கு சிறை
கோவை: லஞ்சம் பெற்ற வழக்கில், போலீஸ்காரருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.கோவை, துடியலுார் பகுதியை சேர்ந்த முரளிதரன் என்பவர், மது அருந்திவிட்டு பைக்கில் சென்ற போது போலீசில் சிக்கினார். போலீசார் அவரது பைக்கை பறிமுதல் செய்தனர். பைக்கை விடுவிக்க, துடியலுார் போலீஸ் ஸ்டேஷன் தலைமை காவலர் ரவிச்சந்திரன், 54, லஞ்சம் கேட்டார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் முரளிதரன் புகார் அளித்தார். போலீசார் அறிவுரைப்படி, 2008, நவ., 7ல், முரளிதரன் கொடுத்த லஞ்சம் பணம், 4,000 ரூபாயை ரவிச்சந்திரன் பெற்ற போது கைது செய்யப்பட்டார். அவர் மீது கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி மோகன ரம்யா, போலீஸ்காரர் ரவிச்சந்திரனுக்கு, ஓராண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.