உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம்; பொள்ளாச்சியில் துவக்கம்

 தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம்; பொள்ளாச்சியில் துவக்கம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், வெளியுறவு அமைச்சகம், தபால் துறையுடன் இணைந்து, 452வது, தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தை துவக்கியது. பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்தில், 452வது, தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் நேற்று துவக்கப்பட்டது. துவக்க விழாவுக்கு, கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ் தலைமை வகித்தார். வெளியுறவு அமைச்சக தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முபாரக்,பாஸ்போர்ட் சேவை திட்ட இயக்குனர் கோவேந்தன்,தமிழ்நாடு வட்ட போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மரியம்மா தாமஸ்,மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, பாஸ்போர்ட் சேவை மையத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ராதாகிருஷ்ணன், தாமோதரன், நகராட்சித்தலைவர் சியாமளா, துணைத்தலைவர் கவுதம், தபால் கோட்டக் கண்காணிப்பாளர் சாந்தினிபேகம், தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில், மொத்தம், 37 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. இதன் கீழ், 93 பாஸ்போர்ட் சேவை மையங்கள் உள்ளன. தற்போது, ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் தபால்துறையுடன் இணைந்து, தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை துவக்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில், 37 லோக்சபா தொகுதிகளில், பாஸ்போர்ட் சேவை மையம் துவக்கியுள்ள நிலையில், பொள்ளாச்சியில், 38வது மையம் அமைக்கப்பட்டுள்ளது. இறுதியாக, சென்னை பெரியார் நகரில், பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்படும். பொள்ளாச்சியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில், உரிய ஆவணங்களுடன் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தால், அவர்களுக்கான அப்பாயின்ட்மென்ட் குறிப்பிட்ட தேதியில் வழங்கப்படும். அரை மணி நேரத்தில் அதற்கான பணிகள் முடித்துத் தரப்படும். போலீசாரின் சரிபார்ப்புக்கு பின் உடனடியாக பாஸ்போர்ட் வழங்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி