கோவை: கோயம்புத்துார் விழாவின் இரண்டாவது நாளான நேற்று, காட்சிப்படுத்திய புதிய தொழில்நுட்பங்கள், செட்டிநாடு உணவு வகை, தாத்தா பாட்டிக்கு கடிதம் எழுதிய தருணம் என, விதவிதமான உணர்வுகளில், பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகள் களைகட்டின. கோவையின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும், கோயம்புத்துார் விழா, நடப்பாண்டு வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. நேற்று பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்தன. கொடிசியா வளாகத்தில், 'சயின்ஸ் அண்ட் டெக் பெஸ்ட்' நிகழ்ச்சி, நேற்றுமுன்தினம் துவங்கியது. கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள், தொழில், மருத்துவம் உட்பட துறையினரின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு, பார்வையாளர்களை வியக்க வைத்து வருகின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் திறமையை வெளிப்படுத்தும் வகையில், 70 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கலைக் கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள், தங்களின் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். புதுப்புது முன்னேற்றங்கள் தொழில்துறையிலும் புதுப்புது முன்னேற்றங்கள் உரு வாகியுள்ளன. மருத்துவம், வாகன உற்பத்தி, வேளாண் என, இத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விளக்கப்படுகின்றன. இதற்காக, 40 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று நடந்த கண்காட்சியை காண, பள்ளி மாணவர்கள், குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்களின் கூட்டம் அதிகரித்தது. பெற்றோர் பலர், தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து, அவர்களின் கண்டுபிடிப்பு திறனை மேம்படுத்த உதவினர். கடைசி நாளான இன்று, மாணவ, மாணவியரின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செட்டிநாடு உணவு திருவிழா கோயம்புத்துார் விழாவின் ஒரு பகுதியாக, கோவை நகரத்தார் சங்கம் சார்பில், கோவையில் 'வைப்ஸ் ஆப் செட்டிநாடு' என்ற பெயரில், இரு நாட்கள், செட்டிநாடு ஷாப்பிங் மற்றும் உணவு திருவிழா, காளப்பட்டி சாலையில் உள்ள, சுகுணா ஆடிட்டோரியத்தில் நேற்று துவங்கியது. மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் துவக்கி வைத்தார். கே.எம்.சி.எச்., செயல் இயக்குனர் அருண் பழனிசாமி, கொடிசியா முன்னாள் தலைவர் வரதராஜ், கே.பி.ஆர்.மில்ஸ் செயல் இயக்குனர் ஆனந்த், 'சேரா' நிறுவன நிர்வாக இயக்குனர் டைசன் மார்ட்டின் உட்பட பலர் பங்கேற்றனர். சைவமும் உண்டு முகப்பில், செட்டிநாடு வீடு போன்ற பிரம்மாண்டமான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. செட்டிநாடு சிக்கன், சிக்கன் பிரியாணி, கோழிக்குழம்பு, செட்டிநாடு வறுத்த கோழி, செட்டிநாடு மட்டன் குழம்பு, மட்டன் ரோஸ்ட், மீன் குழம்பு என, அசைவப் பிரியர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த விருந்து. ஒரே இடத்தில் எல்லாம் கிடைப்பதால், உற்சாகம் கரைபுரள்கிறது. சைவ பிரியர்களுக்கும், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப உணவு வகைகள் வைக்கப்பட்டுள்ளன. டோனர் பாஸ் உண்டு வடை, இனிப்பு, கார வகைகள், பனியாரம், காரமான மற்றும் சுவையான காளான் உணவு, தின்பண்டங்கள் என, திருப்தியாக ருசிக்கலாம். 'டோனர் பாஸ்' ஒரு வேளைக்கு 1,500 என்ற எண்ணிக்கையில் வழங்கப்படுகிறது. மறு பக்கம், 100க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் ஸ்டால்கள் மற்றும் 8 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் தொழில் திறன்களை வெளிப்படுத்தும் ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. பள்ளி மாணவ, மாணவியருக்கு திறன் போட்டிகள், கலை, கையெழுத்து, பேச்சுப்போட்டி, பாட்டு மற்றும் இசை நிகழ்ச்சிகளும், பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன. இறுதி நாளான இன்று, காலை 10:30 முதல் மாலை 8:30 மணி வரை, உணவுத் திருவிழா நடக்கிறது. குடும்பத்தோடு சென்று ருசிக்கலாம்.
கடிதம் எழுதுவது
புதிய அனுபவம்
கடிதம் எழுதும் உணர்வு தற்போது குறைந்து வருகிறது. அந்த பழக்கத்தை மீட்டெடுக்க, தபால் துறை சார்பில், குழந்தைகள் தங்களின், தாத்தா, பாட்டிகளுக்கு கடிதம் எழுதும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. நேற்று, கோவையில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், அங்குள்ள மாணவர்கள், தங்களின் தாத்தா, பாட்டிக்கு கடிதம் எழுதி, தபால் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த தபால் பெட்டிகளில் கடிதத்தை சேர்த்தனர். இது ஒரு புது அனுபவமாக இருந்தது என, மாணவ, மாணவியர் பலர் தெரிவித்தனர்.