| ADDED : டிச 26, 2025 05:09 AM
கோவை,டிச.26- அரசு பஸ் டிரைவரை தாக்கிய, தனியார் பேருந்து டிரைவர் கைது செய்யப்பட்டார். மதுக்கரை, மரக்கம்பெனி ரோட்டை சேர்ந்தவர் அய்யசாமி,51; அரசு பஸ் டிரைவர். பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக, அவினாசிரோடு, லட்சுமி மில் சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அங்குள்ள பஸ் ஸ்டாப்பில், இரண்டு தனியார் பேருந்து டிரைவர்கள், நீண்ட நேரமாக பஸ்சை எடுக்காமல் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் மற்ற பஸ்கள் செல்வதற்கு இடையூறாக இருந்தது. இதை பார்த்த அய்யாசாமி, பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட பஸ்சை எடுக்குமாறு கூறினார். இதனால் தனியார் பஸ் டிரைவர்கள் மதுரை கார்த்திக்,29, திருவையாறு சக்திவேல்,35, சேர்ந்து, “ நீ என்ன போக்குவரத்து போலீசா?” என்று கேட்டு அய்யசாமியை தாக்கினர். புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து, கார்த்திக்கை கைது செய்தனர். சக்திவேலுவை தேடுகின்றனர்.