சர்க்கரை நோயால் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதித்து வருகின்றனர். இதற்கு காரணம் ஒரு பக்கம் நமது மரபணுவாக இருந்தாலும், உணவு பழக்கமும் முக்கிய காரணமாக இருக்கிறது.சர்க்கரை நோய் வரவாய்ப்பு இருப்பதை அறிந்தும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலானோர் பாதித்து வருகின்றனர். சர்க்கரை நோயில் இருந்து நம்மை காத்து, ஆரோக்கியமாக வாழ, பொதுநல மருத்துவர் ஆதித்யன் சில ஆலோசனைகளை கூறினார்.''கடந்த சில மாதங்களுக்கு முன் ஐ.சி.எம்.ஆர்., ஆய்வு நடத்தியது. அதில் இந்தியாவில் சர்க்கரை நோய் அதிகரித்து வருவதற்கு சமோசா, பீசா, பதப்படுத்தப்பட்ட உணவுகள் காரணம் என தெரிவித்துள்ளனர். நமது வாழ்க்கையில் உணவு முறை மாற்றத்தால் நோய்கள் அதிகரித்து வருகிறது.அதேபோல மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் உணவு முறைகளை நாம் அதிகளவில் உண்டு வருகிறோம். அதில் அதிகளவிலான சர்க்கரை, கலர், ஈஸ்ட், மைதா சேர்க்கப்படுகிறது. இது நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். அதற்காக சாப்பிடாமல் இருக்க முடியாது. ஏதாவது ஒரு நாள், மாதத்தில் ஒரு நாள், விஷேச நாட்களில் சாப்பிடலாம். அன்றாட உணவாக எடுக்கும் போது ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும்.சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்க கல்லீரலை பாதுகாக்க வேண்டும். சிறுநீரகம், 10 சதவீதம் கழிவுகளை வெளியேற்றினால், கல்லீரல் தான், 90 சதவீதம் உடல் கழிவுகளை வெளியேற்றுகிறது. அதுமட்டும் அல்லாமல் உடலுக்கு தேவையான வைட்டமின், மினரல் ஆகியவற்றை சேமித்து வைக்கிறது; உற்பத்தியாக்குகிறது. கல்லீரலின் ஆரோக்கியம் உடலின் ஆரோக்கியம்.சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்க, உணவு பழக்க வழக்கங்களை முறையாக கடைபிடிக்க வேண்டும். வெள்ளை உணவுகளான அரிசி, சர்க்கரை, மைதா, உப்பு, உருளை கிழங்கு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தயிர், பன்னீர், முட்டை வெள்ளை சேர்த்து கொள்ளலாம். அதுபோக, 45 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.இவை நம்மை சர்க்கரை நோயில் இருந்து காக்கலாம்; சர்க்கரை நோய் பாதிப்பை தள்ளி போடலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.