நோயாளிகளின் உயிருக்கு மட்டுமல்ல பாதுகாப்பு! :வாகனங்கள், உடமைக்கும் கிடைக்கிறது
கோவை: கோவை அரசு மருத்துவமனையில், பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், கூடுதலாக 62 கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. தவிர, நுழைவாயிலில் சென்சார் டிடெக்டர் கருவி, சோதனை விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இம்மருத்துவமனையில், டாக்டர்கள், பொதுமக்கள் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து, டீன் நிர்மலா கூறியதாவது: செயலாளர் அறிவுறுத்தலின் படி, பாதுகாப்பு காரணங்களுக்காக சூப்பர் ஸ்பெஷாலிட்டி அருகில் உள்ள பிரதான நுழைவாயில், 24 மணி நேரமும் திறந்துஇருக்கும். டீன் அலுவலக நுழைவாயில் கதவு, மூடப்பட்டு இருக்கும். காலை நேரத்தில், அதிக புறநோயாளிகள் வருவார்கள் என்பதால், நடந்து செல்லும் பொதுமக்கள் மதியம் இரண்டு மணி வரை, இரண்டு நுழைவாயில் வழியாகவும் அனுமதிக்கப்படுவார்கள். மருத்துவர்கள், அலுவலர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.ஒரு சிலர் வெற்றிலை, பாக்கு, மது பாட்டில்களை எடுத்து சென்று நோயாளிகளுக்கு வழங்கி, அவர்களின் ஆரோக்கியத்தை கேள்விக்குரியதாக்குகின்றனர். வெற்றிலைக்கறைகளால், வளாக சுவர்களும் பாழாகின்றன.இதுபோன்று, பாதுகாப்பு மட்டுமின்றி, மருத்துவமனை செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையிலும், 'டிரையல்' அடிப்படையில், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே போன்று, பார்வைக்கு புலப்படாத சில இடங்களை தேர்வு செய்துள்ளோம்; கூடுதலாக அவ்விடங்களில், 62 கேமராக்களை பொருத்தவுள்ளோம். தற்போது, 247 கேமராக்கள் கண்காணிப்புக்காக பொருத்தப்பட்டுள்ளன. சி.சி.டி.வி., கண்காணிப்புக்கு, தனி நோடல் அலுவலர் உள்ளார். கன்ட்ரோல் ரூமையும் மேம்படுத்தவுள்ளோம். தவிர, சென்சார் டிடெக்டர் மருத்துவமனையின் நுழைவாயிலில் பயன்படுத்தவுள்ளோம். இதுபோன்ற சில கட்டுப்பாடுகளால், பைக் திருட்டு, சம்மந்தம் இல்லாத நபர்கள் உள்ளே வருவது போன்ற புகார்கள் குறைந்துள்ளன; மேலும் பாதுகாப்பை பலப்படுத்தவுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.