வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் ஆட்சியர்கள். செவிலியர்களை பொய் சொன்ன வைக்க செய்தது யார்
அன்னுார்; அன்னுாரில் ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் பொதுமக்கள் சரமாரி புகார் தெரிவித்தனர்.'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில் கோவை கலெக்டர் கிராந்தி குமார் நேற்று அன்னுார் வட்டாரத்தில் ஆய்வு செய்தார். குன்னத்துராம்பாளையம் நீரேற்று நிலையத்தில் கலெக்டர், அத்திக்கடவு அதிகாரிகளிடம், எவ்வளவு குளங்களில் நீர் நிரப்பப்பட்டுள்ளது. எவ்வளவு நிலுவை. ஏன் தாமதம், எப்போது முடிப்பீர்கள்? என கேட்டார். அதற்கு அதிகாரிகள் பதிலளிக்கையில், '230 குளங்களுக்கு இதுவரை தண்ணீர் விடப்பட்டுள்ளது. கசிவு உள்ளிட்ட காரணங்களால் 28 குளங்களுக்கு தண்ணீர் இதுவரை விடப்படவில்லை. இன்னும் 10 நாட்களுக்குள் அனைத்து குளங்களுக்கும் நீர் விடப்படும்,' என கலெக்டரிடம் உறுதி அளித்தனர். கலெக்டர் பேசுகையில், 'எந்த இடத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டாலும் உடனே அதை சரி செய்ய வேண்டும். யாராவது குழாயை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.இதைத்தொடர்ந்து தர்மர் கோவில் வீதியில் உள்ள புவனேஸ்வரி நகரில் ஆய்வு செய்தார். அப்போது ஏராளமான பொதுமக்கள் கலெக்டரிடம் 'ஓராண்டாக இந்த பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் 50 ஏக்கரில் விவசாயம் செய்ய முடியவில்லை. வீடுகளில் சுவர்கள் பலம் இழந்துவிட்டன,' என சரமாரியாக புகார் தெரிவித்தனர்.அதற்கு கலெக்டர், மழை நீரை பட்டா நிலத்திற்குள் கொண்டு செல்ல நாம் வற்புறுத்த முடியாது. அது மழை நீர் பாதை என குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே நாம் வற்புறுத்த முடியும். எனவே மழைநீர் செல்வதற்காக நிலம் கையகப்படுத்த 10 நாட்களுக்குள் திட்டம் தயாரித்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.அதன் பிறகு அரசுக்கு தெரிவித்து, தேவைப்பட்ட இடத்தில் நிலம் கையகப்படுத்தி மழை நீர் தேங்காமல் அடுத்த குளத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். விவசாயிகள் பேசுகையில், 'மதகுகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,' என்றனர்.ஆய்வில் துணை கலெக்டர் சுரேஷ், வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணைத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குன்னத்தூராம் பாளையம் துணை சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.ஆய்வின் போது அங்கிருந்த செவிலியர்கள், கலெக்டரிடம், ' 70 சதவீத பிரசவம் அரசு மருத்துவமனையிலும், 30 சதவீதம் தனியார் மருத்துவமனையிலும் நடக்கிறது,' என்று கூறினர்.இதுகுறித்த ஆவணங்களை கலெக்டர் பெற்று அதை ஆய்வு செய்தபோது, தனியார் மருத்துவமனையில் தான் அதிக பிரசவம் நடந்தது. அரசு மருத்துவமனையில் குறைவான பிரசவமே நடந்தது தெரிய வந்தது.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலெக்டர் மீண்டும் செவிலியர்களிடம் இதுகுறித்து கேட்டபோது பதில் அளிக்க முடியாமல் செவிலியர்கள் திணறினர்.
என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் ஆட்சியர்கள். செவிலியர்களை பொய் சொன்ன வைக்க செய்தது யார்