| ADDED : பிப் 14, 2024 10:52 PM
கிணத்துக்கடவு, - கிணத்துக்கடவு, அண்ணாநகரில், தெரு நாய் தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு, அண்ணாநகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் குடியிருப்புகள், கடைகள், மருத்துவமனை, கல்யாண மண்டபம் மற்றும் கோவில் இருப்பதால், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.இப்பகுதியில், ரேஷன் கடையும் உள்ளதால், ரேஷன் பொருட்கள் வாங்க அதிகளவில் மக்கள் வருகின்றனர். இப்பகுதியில், அதிகளவு தெரு நாய்கள் சுற்றுவதால், ரேஷன் கடைக்கு வருவோரையும், அவ்வழியில் செல்பவர்களையும் தெரு நாய்கள் விரட்டி அச்சுறுத்துகின்றன.காலை மற்றும் மாலை நேரத்தில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் இந்த வழியில் செல்லும் போது, நாய் தொல்லையால் அவதிப்படுகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதி மக்கள் இரவு நேரத்தில் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலையே உள்ளது.ரேஷன் பொருட்கள் வாங்கி செல்லும் போது பையை கடித்து நாய்கள் இழுக்கின்றன. வாகனத்தில் செல்பவர்களையும் விரட்டுவதால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, இப்பகுதியில் சுற்றும் தெருநாய்களை கட்டுப்படுத்த, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.