உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பம்ப் தொழிலுக்கு ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற அவகாசம் தேவை; மத்திய அரசுக்கு சீமா கோரிக்கை

பம்ப் தொழிலுக்கு ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற அவகாசம் தேவை; மத்திய அரசுக்கு சீமா கோரிக்கை

கோவை; பம்ப் தொழிலுக்கு ஐ.எஸ். ஐ., முத்திரை பெற, கால அவகாசம் அளிக்க வேண்டும் என, 'சீமா' மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. 'சீமா' எனப்படும், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்க தலைவர் மிதுன் ராம்தாஸ் கூறியதாவது: இந்திய தர நிர்ணயத்தின், ஐ.எஸ்.ஐ., முத்திரை கட்டாயமாக்கப்பட்டிருப்பது பம்ப், பவுண்டரி இரு தொழில்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது. பம்ப்களுக்கு இதுவரை ஐ.எஸ். ஐ., நேரடியாக கட்டாயமாக்கப்படவில்லை. வீடு மற்றும் விவசாயத் தேவைகளுக்கான பம்ப்களுக்கு வரும் ஜன.,யில் இருந்து மின்சிக்கனத்துக்கான பி.இ.இ., நட்சத்திரக் குறியீடு (ஸ்டார் மார்க்கிங்) பெறுவது கட்டாயம். நட்சத்திரக் குறியீடு பெறுவதற்கு ஐ.எஸ்.ஐ., அவசியம். இதனால், ஐ.எஸ்.ஐ., கட்டாயமாகிவிடுகிறது. திறந்தவெளி கிணறுகளுக்கான நீர்மூழ்கி பம்ப்கள் (ஐ.எஸ். 14220), போர்வெல் பம்ப்கள் (8034), மோனோ பிளாக் பம்ப்கள்(9079) ஆகிய, மூன்று ரக பம்ப்கள்தான் சந்தையில் 80 சதவீதம் உள்ளன. ஆய்வகங்கள் இல்லை ஐ.எஸ்., 8034 ரகத்துக்கு நாடு முழுதும் 501 உரிமங்கள் உள்ளன. இந்த 501 உரிம நிறுவனங்களும் குறைந்தது 50 வகையான பம்ப்களை தயாரிக்கின்றன. சராசரியாக 30 பம்ப்கள் என வைத்துக் கொண்டாலும், சுமார் 15,000 பம்ப்களை பரிசோதிக்க, நாடு முழுதும் வெறும் 12 ஆய்வகங்கள்தான் உள்ளன. ஐ.எஸ்., 9079 தரத்துக்கு 89 உரிமங்கள் உள்ளன; 7 ஆய்வகங்கள்தான் உள்ளன. ஐ.எஸ்., 14220 தரத்துக்கு 226 உரிமங்கள் உள்ளன; 10 ஆய்வகங்கள் தான் உள்ளன. இவை அனைத்தையும் சேர்த்தால், சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பம்ப்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். என்ன செய்யலாம் 1 ஹெச்.பி., திறன் மோட்டாரில், 8, 10, 12 ஸ்டேஜ் என வெவ்வேறு திறன் கொண்ட மோட்டார் ரகங்கள் இருக்கும். எனவே, ஒவ்வொரு மாடலையும் தனித்தனியாக ஆய்வு செய்ய வைக்காமல், 'குரூப்பிங் கைடுலைன்ஸ்' முறையில், 10 மாடலுக்கும் சேர்த்து, ஒரு மாடலை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தி சான்று வழங்கலாம்; இது கிடைத்தால் ஓரளவு சமாளிக்கலாம். இருப்பினும் வரும் ஜன.,க்குள் கட்டாயம் என்பதில் தளர்வு வேண்டும். 6 மாதம் முதல் ஓராண்டு வரை அவகாசம் தேவை. பவுண்டரி தொழிலுக்கும் ஐ.எஸ்.ஐ., கட்டாயம். ஐ.எஸ்.210 உரிமத்துக்கான பரிசோதனை மேற்கொள்ள, ஒவ்வொரு பவுண்டரிக்கும் ஓர் ஆய்வகம் தேவைப்படுகிறது. எல்லா நிறுவனங்களாலும் ஆய்வகத்துக்காக, முதலீடு செய்ய முடியாது. குறு, சிறு நிறுவனங்களுக்கு போதிய அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். 'போட்டி போட முடியவில்லை' “கழிவு நீரேற்றும் பம்ப்களுக்கு பி.ஐ.எஸ்., தர நிர்ணயமே இல்லை. இவை சீனாவில் இருந்து அதிகம் இறக்குமதியாகின்றன. அவற்றுடன் போட்டிபோட முடிவதில்லை. எனவே, இந்த ரக பம்ப்களுக்கு ஐ.எஸ்.ஐ., கட்டாயமாக்கப்பட வேண்டும்,” என்கிறார் மிதுன் ராம்தாஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை