உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழை, கடும் குளிர் சீதோஷ்ணத்தால் பட்டுக்கு சிக்கல்! அரசு உதவ விவசாயிகள் வலியுறுத்தல்

மழை, கடும் குளிர் சீதோஷ்ணத்தால் பட்டுக்கு சிக்கல்! அரசு உதவ விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை: தொடர் மழை, குளிர் என, சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பட்டுக்கூடு உற்பத்தி பெருமளவு குறைந்து, விவசாயிகள் பாதித்துள்ளனர். உரிய தொழில்நுட்ப வசதிகள், இன்சூரன்ஸ் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக பட்டுக்கூடு தொழிலும் உடுமலையில் நடந்து வருகிறது.மாநில அளவிலும், பட்டுக்கூடு உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கிறது. அவ்வறையில்,உடுமலை, பல்லடம், பொள்ளாச்சி, பழநி உள்ளிட்ட பகுதிகளில், வெண் பட்டுக்கூடு உற்பத்தி பிரதானமாக உள்ளது.இப்பகுதிகளில், 2,778 ஏக்கர் பரப்பளவில், மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு, 1,221 பட்டு புழு வளர்ப்பு மனைகள் வாயிலாக, மாதம் தோறும், பல டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.முட்டை வித்தகங்களிலிருந்து பெறப்படும், முட்டை தொகுதிகள், இளம் புழு வளர்ப்பு மனைகளில், முட்டை பொரித்து, 7 நாட்கள் பராமரித்து, பட்டுக்கூடு உற்பத்தி மனை அமைந்துள்ள விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில், 21 நாட்களில், புழு வளர்ந்து, கூடு கட்டி, விற்பனைக்கு தயாராகும். தற்போது, மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பட்டுக்கூடு உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது.மல்பெரி இலைகளில் ஈரப்பதம் காரணமாக, பட்டுப்புழுக்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பட்டுக்கூடு விவசாயிகள் செய்வதறியாமல் திணறி வருகின்றனர்.

50 சதவீதம் இழப்பு

இந்நிலையில், மழையுடன், குளிர் என, சீதோஷ்ண நிலை காணப்படுவதால், பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில், சீதோஷ்ண நிலை பராமரிக்க முடியாமல், சிக்கல் ஏற்படுகிறது. 20 டிகிரி செல்சியஸ் கீழ் வெப்பநிலை குறைவதால், பட்டுப்புழுக்கள் இறக்கும் சம்பங்களும், கூடுகட்டாத நிலையும் காணப்படுகிறது.இதனால், உற்பத்தி பெருமளவு பாதித்துள்ளது. 100 முட்டை தொகுதிகளுக்கு, 100 கிலோ கூடு கிடைத்த நிலையில், தற்போது, 50 கிலோவுக்கும் குறைவாக உற்பத்தியாவதோடு, பட்டுக்கூடுகளின் தரமும் குறைகிறது.சீதோஷ்ண நிலை மாற்றம், முட்டை, இளம்புழு தரம் இல்லாதது, விலை சரிவு உள்ளிட்ட காரணங்களினால், பெரும்பாலான பட்டு புழு வளர்ப்பு மனைகளில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.தமிழக பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:தொடர் மழை மற்றும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பட்டுக்கூடு உற்பத்தி குறைந்துள்ளது. வழக்கமாக, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் கூடு உற்பத்திக்கு, 25 முதல், 28 டிகிரி செல்சியல் வெப்பநிலை பராமரிக்க வேண்டும்.தற்போது, குளிர் சீதோஷ்ண நிலை காரணமாக, 20 டிகிரி செல்சியஸ்சிற்கும் குறைவாக வெப்பநிலை உள்ளது. இதனால், பட்டுப்புழுக்கள் உணவு எடுக்காமலும், கடும் குளிர் காரணமாக, சுண்ணாம்புக்கட்டி போல் மாறி இறந்து விடுகின்றன. அதிக ஈரம், கழிவுகள் காரணமாக, பூஞ்சான தாக்குதலுக்கு உள்ளாகியும், பட்டுப்புழுக்கள் இறந்து வருகின்றன.இதனால், உற்பத்தி பெருமளவு பாதித்து, விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறையினருக்கும் விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொழில் நுட்ப உதவி தேவை

இந்நிலையில், கடந்த, செப்., மாதம் வரை இருந்த இன்சூரன்ஸ் காலாவதியான நிலையில், பட்டு வளர்ச்சித்துறை சார்பில், பட்டுப்புழு வளர்ப்பு மனைகளுக்கு, மூன்று மாதமாக இன்சூரன்ஸ் புதுப்பிக்கவில்லை.இதனால், பொருளாதார இழப்பை தாங்க முடியாமல், இழப்பீடும் கிடைக்காத நிலையில், பெரும்பாலான விவசாயிகள் தொழிலை விட்டு வெளியேறும் நிலை உள்ளது.குளிர் காலங்களை சமாளிக்கும் வகையில், பட்டு வளர்ச்சி துறை சார்பில் ஹீட்டர் உள்ளிட்ட தொழில் நுட்ப உதவிகள் வழங்கவும், புழு வளர்ப்பு பாதித்தால் உரிய இழப்பீடு வழங்கும் வகையில், இன்சூரன்ஸ் புதுப்பிக்கவும் வேண்டும்.இது தொடர்பாக, மாநில அரசும், பட்டு வளர்ச்சித்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும். இதன் வாயிலாக எங்களுக்கு தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ