ரயில்வே சுரங்கப்பாதையில் மழை; தண்ணீர் தண்டவாளத்தை அச்சத்துடன் கடக்கும் மக்கள்
மேட்டுப்பாளையம்: காரமடை ரயில்வே சுரங்க பாதையில், மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் ரயில் தண்டவாளங்களை பயத்துடன் கடந்து செல்கின்றனர்.கோவை மாவட்டம் காரமடையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்திற்கு கீழ் இருசக்கர வாகனங்கள் மற்றும் மேம்பாலத்திற்கு அருகே உள்ள ராமசாமி சந்து, அண்ணா நகர், உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வசித்து வரும் மக்கள் நடந்து செல்ல சுரங்க பாதை அமைக்கப்பட்டது. மக்கள் பயன்பாட்டில் இருந்த சுரங்க பாதையில், மழை தண்ணீர் பல நாட்களாக தேங்கி உள்ளது. இதனை அகற்றாததால், பொதுமக்கள் சுரங்க பாதையின் மேல் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளங்களை பயத்துடன் கடந்து செல்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'ரயில்வே சுரங்க பாதையில் பல அடி ஆழம் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் தண்டவாளங்களை கடந்து தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. ரயில் வேகமாக வரும் போது, மக்கள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தண்ணீரை அகற்ற காரமடை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.