குப்பை மேடாக மாறிய ராஜபுரம் மயானப்பாதை
மேட்டுப்பாளையம்; ராஜபுரம் மயானத்திற்கு செல்லும் வழி, மீன் கழிவுகள், குப்பைகள் கொட்டும் இடமாக மாறியது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேட்டுப்பாளையம் பங்களா மேடு, ராஜபுரம், சங்கர் நகர் ஆகிய மூன்று குடியிருப்பு பகுதிகளுக்கும், ராஜபுரம் மொக்கை அருகே, தாசில்தார் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் பொது மயானம் உள்ளது. மயானம் அருகே பழைய வாகனங்களை உடைத்து, உதிரி பாகங்கள் விற்பனை செய்யும், பழைய இரும்பு கடைகள் உள்ளன. பழைய வாகனங்களை உடைக்கும் போது, இருக்கைகள் மற்றும் குப்பைகளை, மயானம் அருகே தண்ணீர் செல்லும் ஓடையில் போட்டு வருகின்றனர். ஓடையின் மற்றொருபுறம் கோழி மற்றும் மீன் இறைச்சி கழிவுகளை மூட்டைகளாக கட்டி வந்து, போட்டுச் செல்கின்றனர். மேட்டுப்பாளையம் நகரில் இருந்து எல்.ஐ.சி., அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் சிறுமு கைக்கு செல்லும் மக்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் இப்பள்ளத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.