கோவை : பெரும் பரபரப்பு, இழுபறிக்கு மத்தியில், கோவை மாநகராட்சியின் 7வது மேயராக, தி.மு.க., கவுன்சிலர் ரங்கநாயகி நேற்று பதவியேற்றார்.கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்த, தி.மு.க,, வின், 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா, ராஜினாமா செய்தார். புதிய மேயரை தேர்ந்தெடுக்க, நேற்று காலை, 10:30 மணிக்கு கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில், மறைமுகத் தேர்தல் நடந்தது.முன்னாள் மேயர் கல்பனா உட்பட கவுன்சிலர்கள் காலை, 10:00 மணி முதல் வரத்துவங்கினர். காலை 10:30 மணிக்கு தேர்தல் நடைமுறைகள் துவங்கின.காலை, 10:35 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுருபிரபாகரனிடம் இருந்து, மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரங்கநாயகி விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்தார். போட்டி மனு இல்லை
மாநகராட்சி, 72வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ் முன்மொழிந்தார். மேலும், 71வது வார்டு கவுன்சிலர் அழகு ஜெயபாலன் வழிமொழிந்தார். வேட்புமனுவை காலை, 10:50 மணிக்கு ரங்கநாயகி தாக்கல் செய்தார்.காலை, 11:00 மணி வரை வேட்புமனுத்தாக்கலுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதுவரை வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, கோவை மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுரு பிரபாகரன் அறிவித்தார். கவுன்சிலர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். மேயராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை கமிஷனர், ரங்கநாயகியிடம் வழங்கினார். விக்டோரியா ஹாலுக்கு, அமைச்சர்கள் நேரு, முத்துசாமி மற்றும் தி.மு.க., தலைமை நிலையச் செயலாளர் அன்பகம் கலை ஆகியோர் வந்தனர். தொடர்ந்து, மேயர் ரங்கநாயகி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். செங்கோல் வழங்கிய நேரு
அவரிடம், மேயர் பதவிக்கான சான்றிதழை அமைச்சர்கள் வழங்கி, மேயர் இருக்கையில் அமர வைத்தார். மேயருக்கான செங்கோலை அமைச்சர் நேரு வழங்க,ரங்கநாயகி பெற்றுக் கொண்டார். அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.செய்தியாளர்களிடம் ரங்கநாயகி கூறுகையில், ''எனது வார்டு குறித்து நன்றாக தெரியும். ஒவ்வொன்றாக அனைவருடன் கலந்து ஆலோசித்து, எது அவசியம், எது அவசரம் எனத் தெரிந்து செயல்படுவேன். கோவை மக்களின் தேவையை கேட்டறிந்து நிறைவேற்றுவேன்,'' என்றார். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 'ஆப்சென்ட்'
மாநகராட்சியின், 100 கவுன்சிலர்களில், நேற்று தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியின், 96 கவுன்சிலர்கள், 84வது வார்டு கவுன்சிலர் அலிமாபேகம் ஆகியோர் தேர்தலில் பங்கேற்றனர். அ.தி.மு.க., கவுன்சிலர்கள், பிரபாகரன், ரமேஷ், ஷர்மிளா ஆகியோர் பங்கேற்கவில்லை. உடமைகளுக்கு தடை
தேர்தல் நடந்த விக்டோரியா அரங்கினுள் கவுன்சிலர்கள் மொபைல்போன், பேனா, கை கடிகாரம், பர்ஸ் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. நுழைவாயிலில் இருந்த மாநகராட்சி ஊழியர்கள், கவுன்சிலர்களிடம் இருந்து பெறப்பட்ட பொருட்களை பத்திரப்படுத்தினர். கூட்டத்துக்கு வந்த மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி,''நீட் தேர்வு போல கவுன்சிலர்களை இப்படியா சோதனை செய்வது,'' என, மாநகராட்சி அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினார். பலத்த போலீஸ் பாதுகாப்பு
மிகவும் பரபரப்பாக நடந்த மேயர் தேர்தலுக்காக, விக்டோரியா ஹாலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கவுன்சிலர்கள், அரங்கினுள் சென்ற அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேயர் பதவியை எதிர்பார்த்து, ஏமாந்த சீனியர் கவுன்சிலர்களை, அமைச்சர் முத்துசாமி, சமாதானப்படுத்தி விட்டு சென்றார்.
'பறந்த' முன்னாள் மேயர்
ரங்கநாயகி மேயராகப் பதவியேற்பதற்கு முன், முன்னாள் மேயர் கல்பனா அங்கிருந்து கிளம்பினார். பிற கவுன்சிலர்கள் ரங்கநாயகிக்கு பூங்கொத்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்த சால்வைகள், பூங்கொத்துகள் கீழே வைக்கப்பட்டிருந்தன. சிலர் அவற்றை எடுத்து மேயரிடம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.