பொள்ளாச்சி: அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க, புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டாலும், பஸ்களில் தொடர் பராமரிப்பு, தரமான உதிரி பாகங்களை பயன் படுத்தவும் கோரிக்கை வலுத்துள்ளது. தமிழகத்தில், காரைக்குடி மற்றும் மாமல்லபுரத்தில் அரசு பஸ்கள், அடுத்தடுத்து விபத்துக்கு உள்ளானது. இதையடுத்து, அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்களுக்கு தீவிர புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என, அரசு தெரிவித்தது. அதன்பேரில், அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சி பயிற்சி நிலையத்தில், டிரைவர், கண்டக்டர்களுக்கு இன்று சிறப்பு பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதற்காக, கோவை கோட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளில் இருந்தும், அதிகப்படியான டிரைவர்கள், கண்டக்டர்களை பொள்ளாச்சிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: குடும்ப பிரச்னை, பணியின்போது அதிகாரிகளால் ஏற்படும் நெருக்கடி, வேலைப்பளு ஆகியவற்றால் மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளிட்டவைகளால் டிரைவர்கள், கண்டக்டர்கள் தவிக்கின்றனர். இதனால், போக்குவரத்து விதிகளில் ஏற்படும் கவனச் சிதறல் காரணமாக, விபத்து ஏற்படுகிறது. பயணியரிடம் கடிந்து கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதில் இருந்து மீள்வதற்காகவே, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசு போக்குவரத்து கழக மண்டலத்திலும், பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கும், தினமும், டிரைவர், கண்டக்டர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. முதற்கட்டமாக, நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் வாயிலாக யோகா மற்றும் உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில், சரியான நேரத்தில் முறையாக உணவு உட்கொள்ள வேண்டும் என்பதே அதிகம் அறிவுறுத்தப்படுகிறது. அதன்பின், போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டிய அவசியம், பாதுகாப்பான பயணம், வேகம் குறைத்து டீசலை மிச்சப்படுத்துதல், தேய்மானமின்றி வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட அறிவுரைகளும் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர். அதேநேரம், மன அழுத்தத்தை குறைக்க, டிரைவர், கண்டக்டர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டாலும், பஸ்களில் போதிய பராமரிப்பு மற்றும் தரமான உதிரி பாகங்களை பயன்படுத்தினால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, டிரைவர்கள், கண்டக்டர்கள் தெரிவித்துள்ளனர். டிரைவர், கண்டக்டர்கள் கூறியதாவது: தினமும் புத்தாக்க பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டாலும், தரமான உதிரிபாகங்கள் பயன்படுத்தாதது, தொடர் பராமரிப்பின்மை, தொழில்நுட்பப் பணியாளர்கள் நியமிக்காதது உள்ளிட்டவை தொடர்ந்த வண்ணம் உள்ளது. உதிரி பாகங்கள் பழுதானால், அதனை சீரமைத்து பயன்படுத்தவே முற்படுகின்றனர். தற்போது வழித்தடத்தில் இயக்கப்படும் புதிய பஸ்கள், 'ரீ பாடி' கட்டப்படுகிறது. புதிதாக உதிரிபாகங்கள் பொருத்தப்படுவதில்லை. புத்தாக்க பயிற்சி அளித்தாலும், தினமும் பராமரிப்பு இல்லாத பஸ்சை இயக்கச் செய்வதும், டீசலை மிச்சப்படுத்தி வசூலை அதிகரிக்கச் செய்ய வற்புறுத்துவதுமே மன உளைச்சலை அதிகரிக்கச் செய்கிறது. இவ்வாறு, கூறினர்.
புதிய நியமனம் எப்போது?
அரசு போக்குவரத்து கழகம், கோவை கோட்டத்தில், ஒவ்வொரு பணிமனையில் இருந்தும், வயது முதிர்வு காரணமாக, சிறப்பு நிலை டிரைவர், சிறப்பு நிலை கண்டக்டர், கண்டக்டர், தேர்வு நிலை கண்டக்டர், முதுநிலை தொழில்வினைஞர், தணிக்கையாளர் என, மொத்தம் 39 பேர், வரும் 2026, மார்ச் 31ம் தேதி, ஓய்வு பெறுகின்றனர். இதற்கு மாற்றாக புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். இல்லையெனில், தற்போது பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை அதிகரிக்கும் என, தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.