உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வருந்தும் ராட்வீலர் லவ்வர்ஸ்!

வருந்தும் ராட்வீலர் லவ்வர்ஸ்!

இளைஞர்கள் பலரின் கனவு செல்லப்பிராணியாக இருக்கிறது 'ராட்வீலர்' நாய்கள். என்னதான் ராட்வீலர் வகை நாய்கள் ஆபத்தானது, உரிமையாளர்களையே தாக்கும் குணம் உள்ளது என்று பலர் கூறினாலும், ராட்வீலர் நாய்களை வளர்க்க, இளைஞர்கள் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்திலும், கோவையிலும் பல இளைஞர்கள் ராட்வீலர் நாய்களை விரும்பி வாங்கி வளர்க்கின்றனர். பலரின் வீடுகளில் உள்ள ராட்வீலர் நாய்கள், குழந்தைகளை போல் மாறி விட்டதை பார்க்கமுடிகிறது. வீட்டில் உள்ள பெரியவர்களுடன் விளையாடுவது, சிறுவர்கள், குழந்தைகளுடன் சேர்ந்து சுட்டித்தனம் செய்வது போன்ற, பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. நம் நாட்டு தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற வகையில் அவை மாறிவிட்டன. இந்நிலையில், மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என, தடைசெய்யப்பட்ட நாய் வகைகளின் பட்டியலில், 'ராட்வீலர்' வகையும் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராட்வீலர் உரிமையாளர் சுபாஷ் கூறுகையில், ''ராட் வீலர் நாய்கள் பொதுவாகவே (கார்டியன் டாக்ஸ்) பாதுகாப்பு குணமுடையவை. இயற்கையாகவே கோபம் மற்றும் தன்னம்பிக்கை அதிகம் உள்ள நாய்கள்.நாய்கள் மகிழ்ச்சியாக இருக்க தக்க சூழலை உரிமையாளர்கள் உருவாக்கித் தர வேண்டும். பலர் ஆசைக்காக வாங்கி, வளர்க்க தெரியாமல் வளர்ப்பதால்தான் நாய்களுக்கு கோபம் வருகிறது.ராட்வீலர் வகை நாய்களை, நல்ல சூழலில் வளர்க்க வேண்டும். தடை செய்யும் அளவிற்கு அவை கொடூரமானவை இல்லை,'' என்றார்.பயிற்சியாளர் ஒருவர் கூறுகையில், 'செல்லப்பிராணிகள் வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கம் ஒரு பெரிய தொழில். கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் இவற்றை நம்பி உள்ளனர். தடை செய்வதால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.தற்போது வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் நாய்களுக்கு, கருத்தடை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கருத்தடை என்பது இயற்கைக்கு புறம்பானது.ஒருவேளை நாளை இந்த தடையை நீக்கினால் என்ன செய்வது. நாய்கள் மட்டுமின்றி, வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து விலங்குகளுக்கும், மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி கொடுத்தால், அவை மனிதர்களுக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்காது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்