உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரிப்போர்ட்டர் லீக்ஸ்

 ரிப்போர்ட்டர் லீக்ஸ்

தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க., மவுனமாக இருக்குது தி.மு.க., வால்பாறையில் சட்டசபை தேர்தல் பணி எல்லாம் ஜரூராக நடக்குது. ஆனா, ஆளும்கட்சிக்காரங்க மவுனமாவே இருக்காங்கனு, டீ கடையில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். அவங்க பேச்சை கவனிச்சேன். சட்டசபை தேர்தல் வரப்போகுது. அ.தி.மு.க.,காரங்க தேர்தல் பணியில் விறுவிறுப்பா ஈடுபட்டிருக்காங்க. கட்சியில எம்.எல்.ஏ., சீட் கேட்டு, ஒன்பது பேரு பணம் கட்டியிருக்காங்க. முன்னாள் எம்.எல்.ஏ., உள்ளிட்ட கட்சி நிர்வாகிக பணம் கட்டியிருக்காங்க. வால்பாறை மலை பகுதியில ஓட்டு குறைவாக இருந்தாலும், வெற்றி, தோல்விய நிர்ணயிப்பது என்னவோ வால்பாறை மக்கள் தான். அ.தி.மு.க.,வை பொறுத்த வரை பண பலம் இருந்தா மட்டும் போதாது. கடந்த கால செயல்பாட்டையும் கட்சி மேலிடம் உன்னிப்பா கவனிச்சிட்டிருக்காங்க. எப்படி பார்த்தாலும் வால்பாறை தொகுதியில அ.தி.மு.க., போட்டியிட அதிக வாய்ப்பிருக்கு. அதனால, கட்சிக்காரங்க வரிந்து கட்டிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்காங்க. ஆனா, தி.மு.க.,வை பொறுத்த வரை இந்த முறையும் கூட்டணி கட்சிக்கு தான் 'சீட்' ஒதுக்கப்படும்னு பேச்சு அடிபடுது. அதனால, ஆளும்கட்சியினர் அப்செட்டாகி இருக்காங்க. கூட்டணிக்கு 'சீட்' ஒதுக்குனா, 'அவுட்'டாகி விடுவோம்னு கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பியிருக்காங்களாம். எப்படியோ, வால்பாறையில மழைக்கு தேயிலை துளிர்விட்டிருக்குனு, 'நச்' கமென்ட் அடித்தனர். வெண்பன்றி பண்ணையால தொல்லை நடவடிக்கை எடுக்காத மர்மம் புரியல செங்குட்டைபாளையத்திற்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு வந்த நண்பர்,வெண்பன்றி வளர்க்கறதால சுகாதாரம் பாதிச்சிருக்குனு, புலம்ப ஆரம்பித்தார். என்னன்னு விசாரிச்சேன். அதற்கு, செங்குட்டைபாளையம் பக்கத்துல இருக்குற கள்ளிமேடு பகுதியில தனியாருக்கு சொந்தமான தோப்புல, சில மாதங்களுக்கு முன்னாடி, வெண்பன்றி பண்ணை போட்டாங்க. ஆனா, இந்த பண்ணை பக்கத்துல வீடுகள் இருக்குது. துர்நாற்றம் அடிக்குது, சுகாதாரம் பாதிச்சிருக்கு. இதனால இங்க இருக்கிற குழந்தைகள் முதல் பெரியவங்க வரை எல்லாரும் பாதிக்கறாங்க. இது மட்டும் இல்லாம, பன்றிகளோட கழிவை முறையா சுத்தம் பண்ணறதில்லையாம். மாலை நேரத்துல கொசுத்தொல்லை அதிகமாயிருச்சு. ஏரியாவுல இருக்கற குழந்தைக காய்ச்சலால பாதிச்சிருக்காங்க. அதனால பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து, வி.ஏ.ஓ., தாசில்தார், மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொள்ளாச்சி சப்-கலெக்டர், சி.எம். செல் வரைக்கும் பெட்டிசன் போட்டிருக்காங்க. அதிகாரிங்க நேர்ல வந்து பாக்குறாங்க, அப்புறம் திரும்பி போயிடறாங்க. ஆனா, பன்றி பண்ணை மட்டும் அப்படியே செயல்படுது. இதனால என்ன பண்ணறதுனு தெரியாம மக்கள் கஷ்டப்படுறாங்க. அதிகாரிக யாரும் நடவடிக்கை எடுக்கலைனா, போராட்டத்துல ஈடுபட மக்கள் முடிவு பண்ணியிருக்காங்க. வெண்பன்றி பண்ணை விவகாரத்துல, ஆளும்கட்சி ஆதரவு இருக்கானு தெரியல. ஆனா, எதிர்கட்சியான அ.தி.மு.க., - பா.ஜ.,வும் கம்முனு இருக்கறத பார்த்தா எல்லாமே சந்தேகமா இருக்குனு, நண்பர் விஷயத்தை சொல்லி முடித்தார். எஸ்.ஐ.ஆர்., படிவம் கட்டுகட்டா கிடக்குது ஆளும்கட்சி வில்லத்தனம் வெளிப்பட்டிருக்கு உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்துல, பா.ஜ., நண்பர் ஒருவரை சந்தித்தேன். 'ரெண்டு தொகுதியிலும் ஆளும்கட்சிக்காரங்க வில்லத்தனம் பண்ணியிருக்காங்க தெரியுமானு' பேச ஆரம்பித்தார். உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகள்ல, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில பெரும் குளறுபடி நடந்திருக்கு. எலக் ஷன் கமிஷனால் வழங்கப்பட்ட படிவங்கள் முறையாக அனைவருக்கும் வழங்கினதா அதிகாரிகள் கூறிய நிலையில, கட்டு, கட்டாக ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வசமே அந்த படிவங்கள் இருக்கு. இரு தொகுதிகளிலும், இறந்தவங்க, அடையாளம் தெரியாதவங்கனு, 88,300 பேரை நீக்கி, 'கடமை'யை முடிச்சிருக்காங்க தேர்தல் பிரிவு அதிகாரிக. அதிலும், ஆளும்கட்சியினர் தலையீடு இருந்ததால, எதிக்கட்சியினர் ஒட்டுக்கள வேண்டும் என்றே நீக்கியிருக்கறதா குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மடத்துக்குளம் ஒன்றிய பா.ஜ.,தலைவர் அன்பு, படிவத்தை பெற்று, முறையாக பூர்த்தி செய்து, ஒட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்கியிருக்காரு. அதனை போட்டோவும் எடுத்து வைத்திருந்த நிலையில, தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்ல, அவரு இறந்ததாக குறிப்பிட்டு பெயரை நீக்கியிருக்காங்க. இந்த விவகாரம் எலக் ஷன் கமிஷன் வரைக்கும் புகாரா போயிருக்கு. இதே போல், ஏராளமான புகார்கள் இருக்கும் நிலையில, உயர் அதிகாரிகள் ஆய்வு செஞ்சா மட்டுமே, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கிடைக்கும்னு, விஷயத்தை சொன்னார். ரோட்டு ஓரத்துல 'சில்லிங்' விற்பனை ஆதாரத்தோடு போராட ஆயத்தம் உடுமலை மேம்பாலம் தாண்டி, யூனியன் ஆபிஸ் பஸ் ஸ்டாப் பகுதியில, மழைச்சாரலுக்கு ஒதுங்கினோம். அங்க, 'வாக்கிங்' சென்ற முதியவர்கள் மரத்துக்கு கீழ் நின்று வேதனையோடு பேசிக்கிட்டு இருந்தாங்க. அவங்க உரையாடல் இதோ... மேம்பாலத்த ஒட்டி காலை நேரத்துல நடந்து போக முடியல. காலையில ஆறு மணிக்கே 'சில்லிங்' சரக்கு விக்க ஆரம்பிச்சுட்டாங்க. போன வருஷம் எல்லாம், கொஞ்சம் மறைவா வித்துட்டு இருந்தாங்க. இப்ப ரோட்டுக்கே வந்துட்டாங்க. இப்பத்தான் எல்லா பக்கமும் 'சில்லிங்' சரக்கு விக்குதே அப்படின்னு விட முடியல. இங்கு 'சைட்டிஷ்', டம்ளர் என அனைத்து பொருட்களையும் வைச்சு, ஒரு நிரந்தர 'டாஸ்மாக் பார்' மாதிரியே நடத்தறாங்க. இதனால, ரோட்டுலேயே 'குடி'மகன்கள் நின்னுட்டு அலப்பறை பண்ணுறாங்க. 'வாக்கிங்' போறவங்க, பள்ளி குழந்தைகள், பெண்கள் யாரும் இந்த வழியா போக முடியல. இதுக்கும், இந்த ரோடு தளி, திருமூர்த்திமலை போகற மெயின் ரோடு. பக்கத்துலதான் போலீஸ் ஸ்டேஷனும் இருக்கு. புகார் சொல்லியும் நடவடிக்கை எடுக்காததால, ஹிந்து அமைப்புகள் இப்பிரச்னையை கையில எடுத்து போராட்டத்தில் ஈடுபட போறாங்க. அதுக்கு தேவையான ஆதாரங்களையும் தயார் பண்ணியிருக்காங்க. எப்படியோ இந்த தாராள விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைச்சுட்டா சரினு, பேசிக்கிட்டாங்க.

சுடிதார், சேலைக்கு தையக்கூலி கொடுத்து ஆள் சேர்க்கறாங்க!

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் நண்பருடன் வாக்கிங் சென்றேன். அப்போது, புடவை, சுடிதாருக்கு தையக்கூலியும் கொடுக்கறாங்க தெரியுமானு பேச ஆரம்பித்தார். எங்கேனு விசாரிச்சேன். தி.மு.க.வுல கூட்டத்துக்கு ஆள் சேர்க்க, படுபயங்கரமா திட்டம் போடுறாங்க. முதலில், 200 ரூபாய் கொடுத்து, வாகன ஏற்பாடு செஞ்சு கூட்டத்துக்கு ஆட்கள கூட்டிட்டு போனாங்க. இப்போ, தேர்தல் நெருங்க, மக்களோடு மனச தொடுற மாதிரி விஷயங்களை செஞ்சு ஆட்களை கூப்பிட்டு போக ஆரம்பிச்சுட்டாங்க. பல்லடத்தில் நடக்கும் தி.மு.க. மகளிரணி மாநாடுக்கு ஆட்களை கூட்டிட்டு போக, கட்சி கலரில் புடவையும், சுடிதாரும் கொடுத்து இருக்காங்க.இது மட்டுமில்லாம, புடவைக்கு மேட்சாக ஜாக்கெட்டுக்கு தையல் கூலியாக, 200 ரூபாயும், சுடிதாருக்கு, 500 ரூபாய் வரையும் கொடுத்து ஆட்களை சேர்த்துட்டு இருக்காங்க. இதையெல்லாம் அந்தந்த பொறுப்பாளர்க கிட்ட கொடுத்து முறையாக கொடுக்க சொல்லி இருக்காங்களாம். தேர்தல் நெருங்குற நேரத்துல, மக்கள் மேல பாச மழை பொழிய ஆரம்பிச்சுட்டாங்க. இனி தேர்தல் வர்றப்ப என்னவெல்லாம் கொடுத்து அசத்தப்போறாங்கனு தெரியல. எது எப்படியோ, மக்களுக்கு கொடுத்து பழக்கறதுல திராவிட மாடல் அரசை அடிச்சுக்க முடியாதுனு சொல்லி முடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை