உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேதமடைந்த மின்பெட்டிகளால் விபத்து அபாயம்!

சேதமடைந்த மின்பெட்டிகளால் விபத்து அபாயம்!

பாதுகாப்பு இல்லை

கிணத்துக்கடவு தாலுகா அலுவலக வளாகத்தில், மின் கம்பத்தில் இருக்கும் மின்பெட்டிகள் சேதமடைந்து உள்ளது. மின் ஒயர்களும் வெளியே தெரியும்படி இருப்பதால், மழை காலத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மின் பெட்டியை விரைவில் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- தனபால், கிணத்துக்கடவு.

குப்பை அகற்றப்படுமா?

கோமங்கலம், விவேகானந்தா காலனியில் ரோட்டோரத்தில் அதிகளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதை அப்பகுதி தூய்மை பணியாளர்கள் கவனித்து, குப்பையை அகற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சிவசுப்ரமணியம், பொள்ளாச்சி.

ரோட்டில் வழிந்தோடும் தண்ணீர்

கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் இருந்து, பகவதிபாளையம் செல்லும் ரோட்டின் வளைவு பகுதியில், பேரூராட்சிக்கு உட்பட்ட தண்ணீர் குழாய் உடைந்து ரோட்டில் மாதக்கணக்கில் வழிந்தோடுகிறது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில், குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும்.-- ராமகிருஷ்ணன், கிணத்துக்கடவு.

உருக்குலைந்த ரோடு

கிணத்துக்கடவு, நெ.10.முத்தூரில் இருந்து முத்துக்கவுண்டனூர் செல்லும் ரோடு ஆங்காங்கே சேதமடைந்து பள்ளமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் இவ்வழியில் செல்ல சிரமப்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும்.- ராசு, நெ.10.முத்தூர்.

மின்கம்பம் அகற்றப்படுமா?

கிணத்துக்கடவு -- கொண்டம்பட்டி ரோட்டில், தனியார் கல்லூரி மற்றும் லே-அவுட் அருகே பழுதடைந்த மின்கம்பம் குப்பை போல் கிடக்கிறது. இதை யாரேனும் எடுத்து செல்வதற்கு முன், மின்வாரிய அதிகாரிகள் அகற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.-- தர்மராஜ், கிணத்துக்கடவு.

விபத்து அபாயம்

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே, பாலக்காடு ரோட்டில், வெங்கடேசா காலனி ரோடு, ஏ.டி.எஸ்.சி., தியேட்டர் ரோடு சந்திக்கிறது. ரோடு சந்திப்புகளில் வாகனங்களின் வேகத்தை குறைக்காமல் இயக்குவதால், விபத்து ஏற்படுகிறது. போலீசார் நடவடிக்கை எடுத்து, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.- தங்கவேல், பொள்ளாச்சி.

கால்நடைகள் உலா

உடுமலை உழவர் சந்தை ரோட்டில், கால்நடைகள் கட்டுப்பாடில்லாமல் உலா வருகின்றன. அடிக்கடி வாகனங்களின் குறுக்கே வருவதால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். மேலும், கால்நடைகள் ரோட்டில் தாறுமாறாக செல்வதால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.- வசந்தி, உடுமலை.

வாகனங்கள் ஆக்கிரமிப்பு

உடுமலை பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் செல்ல முடியாதவாறு ஆட்டோ மற்றும் தள்ளுவண்டி கடைகளை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், அங்கு பஸ் பயணியர் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- செல்வம், உடுமலை.

தெருநாய்கள் தொல்லை

உடுமலை ஸ்டேட் பேங்க் காலணி பகுதியில், இரவில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. தெருநாய்கள் வாகன ஓட்டுநர்களை துரத்துவதால் கீழே விழுகின்றனர். பொதுமக்கள் ரோட்டில் நிம்மதியாக நடப்பதற்கும் வழியில்லாமல் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கும் அச்சப்படுகின்றனர்.- கிருபாகரன், உடுமலை.

போலீசார் கவனத்திற்கு

உடுமலை, கல்பனா ரோட்டில் வாகனங்கள் அதிவேகத்துடன் செல்கின்றன. பொதுமக்கள் அதிகம் நடக்கும் பரபரப்பான ரோட்டில் வாகனங்கள் இவ்வாறு அதிவேகத்துடன் செல்வதால் நடந்துசெல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.- வனிதா, உடுமலை.

நிழற்கூரை இல்லை

உடுமலை, கொழுமம் பிரிவு ரோட்டில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை இல்லாததால் பயணியர் அவதிப்படுகின்றனர். அப்பகுதியில் பள்ளி செல்லும் மாணவர்களும் அதிக அளவில் பஸ்சுக்கு காத்திருக்கின்றனர். நிழற்கூரை இல்லாததால் மழை நாட்களில் பள்ளி மாணவர்கள் காத்திருப்பதற்கு இடமில்லாமல் சிரமப்படுகின்றனர்.- சுகுமார், உடுமலை.

முட்செடிகளை அகற்றணும்

உடுமலை ராமசாமி நகரிலிருந்து அரசு கலைக்கல்லுாரி செல்லும் ரோட்டோரத்தில் முள்செடிகள் அதிகம் வளர்ந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் புதர் செடிகள் ரோட்டை மறைப்பதால் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.- சாரதி, உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை