உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கிக்கானி சந்திப்பில் 3 இடங்களில் தேவை சாலை தீவுத்திடல்! விபத்து ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுங்க

 கிக்கானி சந்திப்பில் 3 இடங்களில் தேவை சாலை தீவுத்திடல்! விபத்து ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுங்க

கோவை: கோவை நகரில் பிரதான சாலைகளில் உள்ள சந்திப்புகளை மேம்படுத்தும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. நெடுஞ் சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகளாக இருப்பினும் சாலை பாதுகாப்பு கமிட்டியில் ஒப்புதல் பெற்று, தனியார் நிறுவனங்கள் மூலமாக சாலை சந்திப்புகளில் தீவுத்திடல்கள் உருவாக்கப்பட்டு, பசுமை பகுதி ஏற்படுத்தி வருகிறது. இதற்காக, 2025-26 நிதியாண்டில் 2 கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. இதில் , 'கிக்கானி சந்திப்பு' மிக முக்கியமானது. தடாகம் ரோடு மற்றும் வடகோவை சிந்தாமணியில் இருந்து வரும் வாகனங்கள், ப்ரூக்பாண்ட் ரோட்டில் வரும் வாகனங்கள், கிக்கானி ரயில்வே பாலம் சுரங்கப்பாதை வழியாக வரும் வாகனங்கள் இச்சந்திப்பில் இணைகின்றன. இங்கு சிக்னல் முறை அகற்றப்பட்டு, தனியார் நிறுவன பங்களிப்புடன் 'ரவுண்டானா' அமைத்து பசுமை பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. இது வரவேற்கக் கூடிய விஷயம் என்றாலும் கூட, வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் பணிகள் முழுமையாக செய்யப்படவில்லை. 'ரவுண்டானா' மட்டும் அமைக்கப்பட்டிருக்கிறது. ப்ரூக்பாண்ட் சாலை, வடகோவை சிந்தாமணி சாலை, கிக்கானி பள்ளி சாலை என மூன்று பகுதியிலும் சாலைத்தீவுத்திடல்கள் உருவாக்க வேண்டும். இத்தகைய சாலைத்தீவு திடல்கள் சாலை சந்திப்புகளில் அவசியம் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாததால், வாகனங்கள் திரும்பிச் செல்லும்போது, எதிர் திசையில் வரும் வாகனங்களுடன் மோதிக் கொள்ளும் அபாயம் ஏற்படுகிறது. சிந்தாமணியில் இருந்து வருவோரும், கிக்கானி ரயில்வே சுரங்கப் பாதையில் இருந்து வருவோர் ரவுண்டானா அருகே திரும்பும் போது மோதிக் கொள்கின்றனர். வடகோவை சிந்தாமணி மற்றும் ப்ரூக் பாண்ட் சாலையில் சாலைத்தீவு திடலுக்கு பதிலாக தற்காலிகமாக டிவைடர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பலமாக காற்று வீசினால் இவை கீழே விழுந்து விடுகின்றன. இவை விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இரவு நேரத்தில் டிவைடர் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை என்பதால், விபத்தை சந்திக்கின்றனர். இதற்கு தீர்வு காண, மாநகராட்சி நிதி ஒதுக்கீடு செய்து, சாலை தீவுத்திடல்கள் உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்ட போது, ''கிக்கானி சந்திப்பில் 'ரவுண்டானா' ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்தது. மீண்டும் ஆய்வு செய்து, போக்குவரத்து விதிமுறைக்கு ஏற்ப மூன்று இடங்களில் சாலை தீவுத்திடல்கள் உருவாக்கப்படும்,'' என்றார்.

மேடு, பள்ளமா இருக்கு!

சிந்தாமணியில் இருந்து கிக்கானி வரையிலான ரோடு சமச்சீராக இல்லாமல் மேடு பள்ளமாக காணப்படுகின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது, ஏற்றம் இறக்கத்தை உணர முடிகிறது. கவனமின்றி வாகனத்தை இயக்கினால் விபத்தை சந்திக்க நேரிடும். குடும்பத்துடன் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாற்றம் அடைகின்றனர். ரோட்டை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்