உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குண்டும் குழியுமாக மாறிய சாலை; அமைதி ஊர்வலத்துக்கு ஆயத்தம்

குண்டும் குழியுமாக மாறிய சாலை; அமைதி ஊர்வலத்துக்கு ஆயத்தம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, வஞ்சியாபுரம் முதல் மாக்கினாம்பட்டி வரையிலான கிராம சாலையை புனரமைக்க வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். பொள்ளாச்சி அருகே, வஞ்சியாபுரம் பிரிவில் இருந்து, நாட்டுக்கல்பாளையம் வழியே கிராம சாலை நீள்கிறது. இந்த ரோடு, புதுப்பித்து பல ஆண்டுகளாகிறது. தற்போது, குண்டும் குழியுமாக மாறி விட்டது. அவ்வழியே வாகனங்களில் விரைந்து பயணிக்க முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். சாலையை சீரமைக்க கோரி சப்-கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என, புகாரும் தெரிவிக்கப்படுகிறது. இதனை துறை ரீதியான அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், சுற்றுப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து, அமைதி ஊர்வலம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, பொள்ளாச்சி - வால்பாறை சாலை முதல் பாலமநல்லுார் வழியாக பக்கோதிபாளையம் சாலை (4.46 கி.மீ., நீளம்), பொள்ளாச்சி - வால்பாறை சாலை முதல் ஜமீன்கோட்டாம்பட்டி வழியாக வஞ்சியாபுரம் சாலை (3.20 கி.மீ., நீளம்), ரங்கசமுத்திரம் முதல் மாக்கினாம்பட்டி சாலை (2.98 கி.மீ., நீளம்) கிராம சாலைகள், நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. துறை சார்ந்த அனுமதிக்கு பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படாமல் உள்ளதால், ரோட்டை விரிவாக்கம் செய்து, புதிய தார் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளது. மக்கள் நலன் கருதி, தற்போதைக்கு, 'பேட்ச் ஒர்க்' பணி செய்யப்படும். அதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி