அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ், ஏ.ஐ. பயிற்சி
கோவை; கோவையில்உள்ள அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் உள்ளார்ந்த சிந்தனையை மேம்படுத்தும் நோக்கில், ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தன்னார்வ நிறுவனத்தின் ஆதரவுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.முதல்கட்டமாக, சூலுார் கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வெள்ளலுார் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு, இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரத்துக்கு 2 மணி நேரம் இச்சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 40 வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரோபோட்டிக்ஸ் மற்றும் ஏ.ஐ., குறித்த செயல்முறை புத்தகங்கள் வழங்கப்பட்டு, எளிய முறை கற்றல் ஊக்குவிக்கப்படுகிறது. கோடிங் போன்ற நவீன தொழில்நுட்பங்களும் பயிற்றுவிக்கப்படுவதால், மாணவர்கள் பாடங்களைத் தாண்டி சிந்திக்கும் திறன் ஊக்குவிக்கப்படும் என்கின்றனர் கல்வி ஆர்வலர்கள். பள்ளி தலைமையாசிரியர் செந்துாரன் கூறுகையில், ''அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க, பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்ட கற்றல் அவசியம். இதுபோன்ற சிறப்பு வகுப்புகள், மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வத்துடன் வருவதை ஊக்குவிப்பதுடன், இடைநிற்றலையும் தடுக்க உதவுகிறது,'' என்றார்.