உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உருளும் உருளை! ஊட்டி கிழங்கு வரத்து குறைகிறது; குளிர்பதன கிடங்கு அமைக்கப்படுமா!

உருளும் உருளை! ஊட்டி கிழங்கு வரத்து குறைகிறது; குளிர்பதன கிடங்கு அமைக்கப்படுமா!

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு கோலார் உருளைக்கிழங்குகள் வரத்து அதிகரித்துள்ளது. ஊட்டி உருளைக்கிழங்கு வரத்து மிகவும் குறைந்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் குளிர்பதன கிடங்கு அமைத்து, ஊட்டி உருளைக்கிழங்குகள் விலை வீழ்ச்சியடையாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.மேட்டுப்பாளையம் காந்தி மைதானம், நெல்லித்துறை சாலை உள்ளிட்ட பகுதிகளில், 70க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளுக்கு குஜராத், மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, குன்னுார், கூடலூர், ஈரோடு மாவட்டம் திம்பம், தாளவாடி, பகுதிகளில் இருந்தும் உருளைக்கிழங்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இவை தரம் பிரித்து விற்பனை செய்யப்படுகின்றன. மண்டிகளுக்கு வரும் உருளைக்கிழங்குகள் கேரளாவுக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் லாரிகளில் அனுப்பப்படுகின்றன. மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஊட்டி உருளைக்கிழங்குகள் சீசன் இல்லாததால், மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு தினமும் ஒன்று அல்லது இரண்டு லோடுகள் மட்டுமே வருகின்றன. போதுமான கிழங்குகள் இல்லாததால், கேரளா மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் ஊட்டி கிழங்குகளை வாங்க ஆர்வம் காட்டுவது இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.விவசாயிகள் கூறுகையில், 'பொதுவாக மார்ச் மாதம் என்பது ஊட்டி கிழங்குகளின் விதைப்பு காலம். கோத்தகிரி, குன்னுார், கேத்தி, ஊட்டி என பல்வேறு பகுதிகளிலும் கடந்த காலங்களை காட்டிலும் அதிகம் விதைப்பு நடந்துள்ளது. இன்னும் 2 மாதங்களில் வரத்து அதிகரிக்கும். தற்போது விலை திடீரென மூட்டைக்கு ரூ.1,000த்திற்கும் கீழ் செல்கிறது. பின் ரூ.1,200, 1,300 என வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மூட்டை ரூ.4,500 வரை விற்பனை செய்யப்பட்டது. தமிழக அரசு மேட்டுப்பாளையத்தில் குளிர்பதன கிடங்கு அமைத்து, ஊட்டி உருளைக்கிழங்குகள் விலை வீழ்ச்சியடையாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.--

கோலார் கிழங்கு 'மவுசு'

உருளைக்கிழங்கு மண்டி வியாபாரிகள் கூறியதாவது:குஜராத், கோலார், திம்பம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் உருளைக்கிழங்குகளின் வரத்து அதிகரித்துள்ளது. கோலார் கிழங்குகள் தினமும், 50 லோடுகள் வருகின்றன. தற்போது 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ஊட்டி கிழங்கின் விலை ரூ.1,250 முதல் ரூ.1,300 வரை விற்பனை ஆகிறது. குஜராத் கிழங்குகள் ரூ.700 முதல் ரூ.900 வரையிலும், கோலார் கிழங்குகள் ரூ.800 முதல் ரூ.950 வரையிலும், திம்பம் கிழங்குகள் ரூ.700 முதல் ரூ.900 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.இந்த விலை நாளுக்கு நாள் மாறும். கோலார் கிழங்குகள் வரத்து அதிகரிப்பால், ஊட்டி கிழங்குகளுக்கு பதில் கோலார் கிழங்குகளை வியாபாரிகள் வாங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி