பொள்ளாச்சி : பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில், மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'ரவுண்டானா' அமைத்து, சாலை புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது.பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல், மார்க்கெட் ரோடு வழியாக, தினமும் அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, கேரளா மற்றும் ஆனைமலை சுற்றுப்பகுதி கிராமங்கள் இவ்வழித்தடம் பிரதானமானது.மேலும், மார்க்கெட் ரோடு பகுதிகளில் அதிகளவு வணிக வளாகங்கள், குடோன்கள் செயல்படும் நிலையில், சரக்கு வாகனங்களும் அதிகமாக வந்து செல்கின்றன. இப்பகுதியில் அதிகரிக்கும் வாகனங்களால் நெரிசல் ஏற்படுகிறது. அவ்வப்போது நடத்தப்படும் அரசியல் கட்சி கூட்டங்களாலும் நெரிசல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மீன்கரை ரோடு, மார்க்கெட் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது.இருப்பினும், ரோட்டிலேயே நிறுத்தப்படும் கனரக வாகனங்கள், எந்த நேரத்திலும் இறக்கப்படும் சரக்குகள் என, வழித்தடத்தில் தடை ஏற்படுவதால் பிற வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.மேலம், திருவள்ளுவர் திடலில், நான்குபுறமும் அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்படுவதால், விபத்தும் அதிகரிக்கிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, திருவள்ளுவர் திடலில், 'ரவுண்டானா' அமைக்கவும், அங்குள்ள சரக்கு வாகனங்கள் நிறுத்த மாற்று இடம் ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.அதன்படி, நெடுஞ்சாலைத்துறையால், சாலைப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மூன்று கோடி ரூபாய் மதிப்பில் சாலை சந்திப்புகள் மேம்படுத்துதல் மற்றும் ரவுண்டானா அமைக்கும் பணியும் துவங்கியுள்ளது. மார்க்கெட் ரோட்டில், 'யு டர்ன்' (ரோடு திருப்பம்) அமைக்கப்படவும் உள்ளது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:திருவள்ளுவர் திடலில், நோட்டீஸ் அளிக்கும் வகையில் ஆக்கிரமிப்புகள் கிடையாது. இருப்பினும், கடைகளின் முகப்பு பகுதிகள், பெயர் பலகைகள், தற்காலிக கடைகள் அகற்றம் செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.முறையாக மழைநீர் வடிகால் அமைத்து, ரோடு புதுப்பிக்கப்படும். மேலும், ரவுண்டானா அமைக்கப்பட உள்ள இடம் அருகே டிரான்ஸ்பார்மர், ரோட்டில் மின்கம்பங்களும் உள்ளன. அவற்றை மாற்றியமைக்க, மின்வாரியத்திற்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. விரைந்து பணிகள் முடிக்கப்படும்.ரவுண்டானா அமைத்து, நான்கு பகுதியிலும் ரோடு விரிவாக்கம் செய்து, போக்குவரத்து வசதி மேம்படுத்தப்படும். இதனால், திருவள்ளுவர் திடலில் ஏற்படும் நெரிசல், வாகனங்கள் திரும்புவதில் நிலவும் இடையூறு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.