உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆர்.டி.இ. இலவச இட ஒதுக்கீடு மாணவர் பட்டியல் வெளியீடு

 ஆர்.டி.இ. இலவச இட ஒதுக்கீடு மாணவர் பட்டியல் வெளியீடு

கோவை: நடப்பு கல்வியாண்டுக்கான (2025-26 ) கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், மாவட்டத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இலவச இட ஒதுக்கீட்டில் பயில 1,608 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு கட்டாயக் கல்வி உரிமை சட்டத்திற்கான நிதியை விடுவித்ததை தொடர்ந்து, மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, தற்போதைய நுழைவு நிலை வகுப்புகளில் (முன்பருவக் கல்வி), தனியார் சுயநிதி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான சேர்க்கை நடைமுறைகள் தொடங்கின. தகுதியான மாணவர்களை, ஆர்.டி.இ., ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்ய, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, கோவை வருவாய் மாவட்டத்தில் உள்ள 335 தனியார் சுயநிதி பள்ளிகளில், ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில், இலவச இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் இருந்து, 2,204 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தேர்வான மாணவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'பொதுவாக எல்.கே.ஜி., வகுப்பு இல்லாத தனியார் பள்ளிகளில் மட்டுமே, ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் 1ம் வகுப்பில் சேர்க்கை நடைபெறும். கோவையில் செயல்படும் பெரும்பாலான பள்ளிகளில், எல்.கே.ஜி., யூ.கே.ஜி., போன்ற முன்பருவ வகுப்புகள் உள்ளன. 'இதனால் 1ம் வகுப்பிற்கான விண்ணப்பங்கள் குறைவாகவே பெறப்பட்டன. பரிசீலனைக்கு பின் 1,608 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் விவரப் பட்டியல், அந்தந்த பள்ளிகளின் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி