உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துாய்மை பணியாளர் இ.எஸ்.ஐ., சான்றில் குளறுபடி; மருத்துவ உதவி கிடைக்காமல் குடும்பத்தினர் அவதி

துாய்மை பணியாளர் இ.எஸ்.ஐ., சான்றில் குளறுபடி; மருத்துவ உதவி கிடைக்காமல் குடும்பத்தினர் அவதி

கோவை; மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்களின், இ.எஸ்.ஐ., ஆவணங்களில் இறந்தவர் பெயர் உள்ளிட்ட குளறுபடி இருப்பதால், மருத்துவம் பார்க்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.கோவை மாநகராட்சியில், 4,650 ஒப்பந்த துாய்மை பணியாளர், 910 கொசு ஒழிப்பு பணியாளர், 500க்கும் மேற்பட்ட டிரைவர், கிளீனர்கள் உள்ளனர். இப்பணியாளர்கள் மருத்துவம் வசதி பெற, ஊதியத்திலிருந்து ஒரு பங்கு தொகையை, இ.எஸ்.ஐ.,க்கு செலுத்தி வருகின்றனர்.பல வருடங்களாக இப்பணியாளர்களுக்கு, இ.எஸ்.ஐ., அடையாள அட்டை வழங்கப்படாத நிலையில், தொடர் போராட்டங்களுக்குப் பிறகும், தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்றும், கடந்தாண்டு முதல் இ.எஸ்.ஐ., சான்றுகள் வழங்கப்படுகின்றன.ஆனால், பெரும்பாலான தொழிலாளர்களின் இ.எஸ்.ஐ., ஆவணங்களில், மொபைல் போன் எண்கள் தவறாக உள்ளன. குறிப்பாக, திருமணம் ஆனவர்களுக்கு 'திருமணம் ஆகாதவர்' என்று சான்றிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இ.எஸ்.ஐ.,யில் உறுப்பினராக இருந்து, இறந்து போன தாய், தந்தை ஆகியோரது பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், அவசர காலங்களில் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் அலைக்கழிப்புக்கு ஆளாவதாக, துாய்மை பணியாளர்கள் குமுறுகின்றனர்.

10 நாளில் தீர்வு!

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது,''இ.எஸ்.ஐ., ஆவணங்களில் எழுத்துப்பிழை, குடும்ப உறுப்பினர்கள் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ள, வார்டு வாரியாக துாய்மை பணியாளர்களுக்கு முகாம்கள் நடத்தப்படுகின்றன. ''இன்னும், 10 நாட்களில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !