உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சத்ய சாய் திவ்ய சரிதம் தெய்வீக கண்காட்சி: பகவான் வரலாறு அறிய அருமையான வாய்ப்பு

 சத்ய சாய் திவ்ய சரிதம் தெய்வீக கண்காட்சி: பகவான் வரலாறு அறிய அருமையான வாய்ப்பு

கோவை: ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, 'ஸ்ரீ சத்ய சாய் திவ்ய சரிதம்' எனும் தெய்வீக கண்காட்சி, கோவையில் நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது. சாய்பாபா காலனியில் உள்ள சாய் தீப் மண்டபத்தில், ஸ்ரீ சாய் சாக்ஷாத்காரம் அறக்கட்டளை, ஸ்ரீ சத்ய சாய் மாருதி சேவா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நாக சாய் அறக்கட்டளை ஆகியன இணைந்து இக்கண்காட்சியை நடத்துகின்றன. காலை, 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது; அனுமதி இலவசம். கண்காட்சியில் சத்ய சாய்பாபா அணிந்த ஆடைகள், கண் கண்ணாடி, பேனா, உணவு அருந்திய தட்டு, டம்ளர் உள்ளிட்ட பொருட்களும், அவரை பற்றிய புத்தகங்கள், புகைப்படங்கள், சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. சாய் சாக்ஷாத்காரம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் நவீன் சாய் பேசியதாவது: அறிவு, ஞானக்கண்களை திறக்கும் கண்காட்சி இது. சத்ய சாய்பாபா மனித வடிவம் எடுத்து மக்கள் சேவையை, மகேசன் சேவையாக செய்துவந்தார். இங்கு இடம்பெற்றுள்ள சித்திரம், புகைப்படம் உள்ளிட்டவை ஷீரடி, சத்யசாய்பாபாவின் ஓய்வில்லாத மக்கள் பணியை காட்டுகிறது. இவற்றை காண்பவர்களுக்கு, தன்னலமற்ற சேவை செய்யும் உணர்வு உருவாகும். பெரிய மனமாற்றம் ஏற்படும். அறிவுக்கண் திறக்கும். இந்த கலியுகத்தில் ஷீரடி, சத்ய சாய்பாபா ஆகியோரின் சங்கல்பங்களையும் கண்காட்சி வாயிலாக உணரமுடியும். இந்த கண்காட்சி, இதயத்தில் தெய்வீக அன்பை நிரப்பும். மகான்கள், தேசத்தை ஆளுபவர்கள், தெய்வீக நிலையில் இருப்பவர்கள் சாய்பாபாவின் ஆசி பெற கோவை வரவுள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார். கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கு, ஷீரடி சாய்பாபாவின் உண்மையான பாதச்சுவடு பதித்த புகைப்படம் மற்றும் தெய்வீக பொருட்கள் அருட்பிரசாதமாக வழங்கப்படுகின்றன. புட்டபர்த்தி ஸ்ரீ சத்யசாய்பாபாவின் ஆசி பெற்ற யசோதா அம்மையார், ஸ்ரீ சாய் சாக்ஷாத்காரம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆனந்த் சாய், சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சேஷசாயி, நாக சாய் அறக்கட்டளை உபதலைவர் பாலசுப்ரமணியம், செயலாளர் வக்கீல் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ