| ADDED : நவ 25, 2025 05:36 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் உள்ள கடைகளில், பணியாளர்களுக்கான இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என, ஆய்வு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் நிறுவனங்களில் நின்று கொண்டு பணிபுரியும் பணியாளர்கள், பணியிடையே அமர்வதற்கு ஏற்ப இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது, நடைமுறையில் உள்ளது. இருப்பினும், பொள்ளாச்சி நகரில் உள்ள பல கடைகளில், பணியாளர்களுக்கான இருக்கை வசதி ஏற்படுத்தப்படவில்லை. ஒன்றிரண்டு இருக்கை வசதிகள் மட்டுமே செய்துதரப்படுவதால், பணியாளர்கள் செய்வதறியாது திணறுகின்றனர். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், கடைகள்தோறும் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் கூறுகையில், 'தமிழகத்தில், பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தித் தராத நிறுவனங்கள் மீது, தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் செயல்படும் கடைகளில் ஆய்வு நடத்த வேண்டும். கடைகளில், தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்களை காட்சிப்படுத்தி வைக்கவும் துறை ரீதியான அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, கூறினர்.