உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிண்டிகேட் அமைத்து  தேங்காய் விலை குறைப்பு தென்னை சாகுபடியாளர்கள் வேதனை 

சிண்டிகேட் அமைத்து  தேங்காய் விலை குறைப்பு தென்னை சாகுபடியாளர்கள் வேதனை 

பொள்ளாச்சி : 'வியாபாரிகள், 'சிண்டிகேட்' அமைத்து, தேங்காய் விலையை குறைப்பதால் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்,' என, தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்க தலைவர் தெரிவித்தார்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்குள்ள இளநீர், தேங்காய் உள்ளிட்டவற்றுக்கு மவுசு அதிகமாக உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக தேங்காய், கொப்பரைக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.கடந்த சில வாரங்களாக விலை அதிகரித்து வந்த நிலையில், வியாபாரிகள் திட்டமிட்டு, விலை குறைப்பில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்க தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை:பல ஆண்டுகளாக தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு வகையில், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளை தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டது. அவற்றின் பலனாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.அதில், தமிழகத்தில் உற்பத்தியாகும் எண்ணெய் வித்துகள் பயன்பாடு அதிகரித்து, விவசாயிகள் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்ற நோக்கத்தில், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வகைகளுக்கு வரிகளை உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்தோம். இதை தொடர்ந்து, மத்திய அரசு எண்ணெய் இறக்குமதி வரியை உயர்த்தியது.கடந்தாண்டு ஏற்பட்ட வறட்சி, தென்னையில் ஏற்படும் பல்வேறு நோய் தாக்குதல் காரணமாகவும், தேங்காய் வரத்து சரிந்துள்ளது. இந்நிலையில், விலை உயர்ந்து வந்தது. தமிழகத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, கர்நாடகாவில் தசரா பண்டிகை மற்றும் வட மாநிலத்தில் காளி திருவிழா மற்றும் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை என தொடர்ச்சியாக தேங்காய் பயன்பாடு அதிகரிக்கும் சூழல் உள்ளது.இதனால், கடந்த வாரத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை விலை உயர்ந்தது. இந்த விலை ஏற்றத்தின் பலனை விவசாயிகள் முழுமையாக ஒரு வாரம் கூட அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட, வெளி மாநில வியாபாரிகள், 'சிண்டிகேட்' அமைத்து, தென்னை சார்ந்த பொருட்களுக்கு செயற்கையான விலை குறைப்பை ஏற்படுத்துகின்றனர்.இதனால், தென்னை பொருட்களுக்கு மீண்டும் விலை வீழ்ச்சி ஏற்படுமோ என்ற அச்ச உணர்வில், விவசாயிகள் தேங்காயை குறைவான விலைக்கு விற்பனை செய்கின்றனர்.தேங்காய் வரத்து இல்லாத சூழலில், அதிகப்படியான தேவை இருந்தும், வியாபாரிகளின் சூழ்ச்சியால், குறைந்த விலைக்கு விற்று விவசாயிகள் மிக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். திட்டமிட்டு செயல்பட்டு, விவசாயிகளை குழப்பத்தில் ஆழ்த்தி, தேங்காய் மார்க்கெட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை