நொய்யல் ஆற்றில் கலக்கும் பாதாள சாக்கடை கழிவு நீர்
கோவை : கோவை செல்வபுரத்தில் இருந்து வரும் பாதாள சாக்கடை கழிவு நீர், புட்டுவிக்கி பாலம் அருகே நொய்யல் ஆற்றில் நேரடியாக கலக்கிறது.கோவையில் பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய் பதிக்கப்பட்டு இருக்கிறது. 40 - 45 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், அழுத்தம் தாங்காமல் பழைய குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. மாநகராட்சி பொது நிதியில் அவ்வப்போது குழாய் மாற்றும் பணி நடந்து வருகிறது.பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 வார்டுகளில் உள்ள பாதாள சாக்கடை குழாய்களை அகற்றி விட்டு, புதிய குழாய் பதிப்பதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.அனைத்து கட்டடங்களுக்கும் இணைப்பு வழங்குவதற்கு பொறியியல் பிரிவினர் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.இச்சூழலில், செல்வ புரம் பகுதியில் சேகரமாகும் பாதாள சாக்கடை கழிவு நீர், புட்டுவிக்கி ரோட்டில் நொய்யல் ஆற்றுப்பாலம் அருகே பிராமணர்கள் சுடுகாட்டுக்கு அருகில், ஆற்றில் நேரடியாக கலக்கிறது.அதன் அருகில், இறந்தவர்கள் பயன்படுத்திய மெத்தை, தலையணை மற்றும் துணிகளை குப்பையாக குவித்து வைத்திருக்கின்றனர். கழிவு நீர் துர்நாற்றம் வீசுகிறது; அப்பகுதியை வாகன ஓட்டிகளால் கடந்து செல்ல முடிவதில்லை.
விட்டுட்டாங்க போல!
மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'செல்வபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டபோது, கழிவு நீர் செல்வதற்கான குழாய் திறக்கப்பட்டது; அடைக்காமல் விட்டு விட்டார்கள் போலிருக்கிறது. கழிவு நீர் செல்கிறதா என ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.