மார்க்கெட்டில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஆடு விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒருபகுதியில், வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. இதில், மாட்டுச்சந்தை கூடும்போது, அதன் அருகேயே ஆடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.ஆடுகளை வாங்க, உள்ளூர் மற்றும் -வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் அதிகம் வருகின்றனர். வரும், 31ம் தேதி ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று நடந்த சந்தையில், ஆடுகள் வரத்து வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.ஆனைமலை, கோட்டூர், நெகமம், வேட்டைக்காரன்புதூர், கோமங்கலம், வடக்கிபாளையம், கிணத்துக்கடவு, உடுமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வெள்ளாடு, செம்மறியாடு என இரு வகை ஆடுகள், 800க்கும் மேற்பட்டவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.மேலும், சிலர், ஆட்டுக்குட்டிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.ஆடுகளை வாங்க சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வந்தனர்.இதில், எட்டு கிலோ எடைக்கொண்ட ஆடு, 5,500 ரூபாய் முதல்,6,500 ரூபாய் வரையிலும், 20கிலோ எடைகொண்ட ஆடு, 16 ஆயிரம் முதல், 17 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. அதில், 25 கிலோ எடைகொண்ட பெரிய ஆடுகள், 22 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலைபோனது. ஒரே நாளில், 80 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றது.