உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சியா தொடரணுமா; பேரூராட்சியா உயரணுமா! கணியூரில் கருத்து கேட்பு

ஊராட்சியா தொடரணுமா; பேரூராட்சியா உயரணுமா! கணியூரில் கருத்து கேட்பு

கருமத்தம்பட்டி : ஊராட்சியாகவே தொடருணுமா அல்லது பேரூராட்சியாக தரம் உயருணுமா என, கணியூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.சூலூர் ஒன்றியத்தில், மாநகராட்சியை ஒட்டியுள்ள பட்டணம், சின்னியம் பாளையம், நீலம்பூர், மயிலம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளும், இருகூர் பேரூராட்சியும் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன.அதேபோல், அரசூர், கணியூர் உள்ளிட்ட ஊராட்சிகள் பேரூராட்சியாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஊராட்சியில் உள்ள மக்கள் தொகை ,ஆண்டு வருமானம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட புள்ளி விபரங்களை மாவட்ட நிர்வாகம் சேகரித்து வருகிறது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மக்களிடம் கருத்து கேட்டுள்ளது.இந்நிலையில், கணியூர் ஊராட்சியில், கருத்து கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம் தலைவர் வேலுசாமி தலைமையில் நடந்தது. அதில், பொதுமக்கள், அனைத்து கட்சி பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுநல அமைப்புகள், சங்கங்கள், மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு, உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.ஊராட்சி கூட்டம் மற்றும் கிராம சபையில், ஊராட்சியாகவே தொடர வேண்டும், என, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.பிரதிநிதிகள் பேசுகையில், 'பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால், வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி உயரும். 100 வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு வேலை இருக்காது. ஊராட்சியாக இருக்கும்போது கிடைக்கும், மத்திய, மாநில அரசின் சிறப்பு நிதிகள் கிடைக்காது. அதனால், பேரூராட்சியாக தரம் உயர்த்தக்கூடாது. ஊராட்சியாகவே செயல்பட அனுமதிக்க வேண்டும்' என்றனர்.'ஊராட்சியாகவே தொடர வேண்டும் அல்லது இரு ஊராட்சிகளாக பிரிக்க வேண்டும். பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டாம், என, பா.ஜ., வினர் பேசினர். ஊராட்சியாகவே தொடரவேண்டும் என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ