உத்தேச திட்டச்சாலைகளை கைவிடலாமா? கவுன்சிலர்களிடம் மாநகராட்சி கருத்து கேட்பு
கோவை: கோவை மாவட்டத்துக்கான, 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கும் பணியில் நகர ஊரமைப்புத்துறை ஈடுபட்டிருக்கிறது. இறுதி செய்வதில், இழுபறி ஏற்பட்டிருக்கிறது. இச்சூழலில், மாநகராட்சி பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த உத்தேச திட்டச்சாலைகளை நீக்க திட்டமிடப்பட்டது.இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, மாநகராட்சி வடக்கு மண்டல கூட்டத்தில், மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் கூட்டம் நடத்தி, 'மாநகராட்சி பகுதியில் உள்ள திட்டச்சாலைகளை எக்காரணம் கொண்டும் நீக்கவோ அல்லது மாறுதலுக்கு உட்படுத்தவோ கூடாது' என, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், நகர ஊரமைப்புத்துறை அதிகாரிகள், இதை கவனத்தில் கொள்ளவில்லை.இத்தகவல், தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், மாநகராட்சி கவுன்சிலர்களிடம் ஆலோசித்து, எந்தெந்த திட்டச்சாலைகள் அவசியம் என முடிவெடுத்து, அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மண்டலம் வாரியாக ஆலோசனை கூட்டம் நடந்தது. எந்தெந்த திட்டச்சாலைகள் அவசியம் என்பதை கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் கூறியதாவது:உத்தேச திட்டச்சாலைகளை எக்காரணம் கொண்டும் கைவிடக் கூடாது. பெயரளவுக்கு வைத்திருக்காமல் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஆண்டுக்கு குறிப்பிட்ட சாலைகளை தேர்ந்தெடுத்து, நிதி ஒதுக்கி, திட்டச்சாலைகளை உருவாக்க வேண்டும்.பொது ஒதுக்கீடு இடம் ஒதுக்காமல், அதற்குரிய தொகையை செலுத்தும் நடைமுறை கொண்டு வந்ததால், மாநகராட்சிக்கு தானமாக நிலம் பெறுவது தடைபட்டுள்ளது. எதிர்காலத்தில் திறந்தவெளி இடமே இல்லாத சூழல் உருவாகிவிடும். எனவே, உத்தேச திட்டச்சாலைகளை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.