சிடார்க் சார்பில் இ - -வாகன பயிற்சிக்கு திட்டம்; தொழில் துறையினருக்கு கட்டணம்
கோவை; கோவையில் உள்ள இன்ஜி., மாணவர்களுக்கு இ--வாகனங்கள் எனப்படும் மின் வாகனங்கள் தொடர்பான பயிற்சியை இலவசமாக வழங்குவதாக, 'சிடார்க்' தெரிவித்துள்ளது. சிடார்க் தலைவர் மோகன் செந்தில்குமார் கூறியதாவது: சிடார்க் சார்பில், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, 'சிடார்க் மின்வாகன அறக்கட்டளை' துவக்கப்பட்டுள்ளது. இதன் சார்பில், இரண்டு மற்றும் மூன்று சக்கர மின் வாகனங்களுக்கான மோட்டார், கன்ட்ரோலர், பேட்டரி உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களை ஆய்வு செய்வதற்கான சி.எப்.சி., எனப்படும் பொது வசதி மையம், ரூ.9.25 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டு வருகிறது. பரிசோதனை மற்றும் பயிற்சி அளிக்க இம்மையம் பயன்படுத்தப்படும். தொழில்துறையினர் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி, ஓரிரு வாரங்களில் துவங்க உள்ளது. தொழில்துறையினருக்கு கட்டணம் உண்டு. மூன்றாம் ஆண்டு பயிலும் இன்ஜி., மாணவர்களுக்கு, மின் வாகனம் தொடர்பான மூன்று நாள் பயிற்சி இலவசமாக வழங்கப்படும். உணவுக்கான கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும். ஒரு குழுவுக்கு 25 மாணவர்கள் வீதம், வாரத்துக்கு ஒரு குழுவாக, மாதம் 100 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மோட்டார், டிரைவ், பேட்டரி, கன்ட்ரோலர் என அனைத்தையும் உள்ளடக்கிய பயிற்சியாக இது அமையும். பட்டப்படிப்பு முடித்ததும், இத்துறையில் நிபுணத்துவத்துடன் அவர்கள் வேலைவாய்ப்பில் சேரவோ, தொழில் துவங்கவோ இது வாய்ப்பாக அமையும். மாணவர்களைத் தேர்வு செய்ய, இன்ஜி., கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். வரும் மாதத்தில் பயிற்சி துவங்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். துணைத்தலைவர் கார்த்திகேயன், பொருளாளர் ஸ்ரீஹரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.